Header Ads



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கை

சாக்சி மஹராஜின் எம்.பி பதவியை பறிக்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குடியரசு தலைவருக்கு கோரிக்கை

பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சாக்சி மஹராஜ் என்ற மதவெறி பிடித்த சாமியார் தொடர்ச்சியாக இந்து - முஸ்லிம் மதக்கலவரத்தை தூண்டும் வண்ணம் பேசுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையில்லை என்றும், அவர்களை காலணிகள் போன்றே இஸ்லாம் வைத்திருக்கிறது என்றும் உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷம் தோய்ந்த கருத்துக்களை தற்போது சாக்சி மஹராஜ் கூறியிருக்கிறார். சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் சாக்சி மஹராஜின் கருத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என கேள்வி எழுப்பி கேலி செய்த கற்காலத்திலேயே பெண்களுக்கு சொத்துரிமை, வழிபாட்டுரிமை, விரும்பிய மணமகனை தேர்வு செய்யும் உரிமை, விருப்பமில்லாத கணவரை விவாகரத்து செய்யும் உரிமை போன்ற பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கியது இஸ்லாம். பள்ளிவாசலில் சென்று தொழுகை செய்கின்ற உரிமை பெண்களுக்கு நபிகள் நாயகம் காலத்திலேயே நடைமுறையில் இருந்தது. முஸ்லிம்களின் முதல் புனித தளமான மக்கா கஅபா பள்ளிவாசலில் இன்றளவும் பெண்கள் தொழுகை செய்வது சர்வ சாதாரணமான ஒன்றாகும். இஸ்லாம் பெண்களின் உரிமைகளை ஒருபோதும் மறுப்பதில்லை என்பதே உண்மையாகும்.

உண்மை இவ்வாறிருக்க,மதநல்லிணக்கத்தை சிதைக்கும் ஒற்றை நோக்கோடு மட்டுமே முஸ்லிம்களை பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி, பொது சமூகத்தில் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் சாக்சி மஹராஜ் எம்.பி பதவியை பறித்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென குடியரசு தலைவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு 
மு.முஹம்மது யூசுப்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

1 comment:

Powered by Blogger.