"இறைவா, உன்னிடம் நல்ல முடிவைக் கேட்கிறேன்....”
நாம் இறந்தால் நமக்காக யார் அழுவார்..? நாம் நல்லவர்களாக இருந்தால்.. நமக்காக யாரும் அழாவிட்டாலும், வானமும் பூமியும் அழும்.
ஃபிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது குறித்து அல்குர்ஆன் கூறுகிறது:
"ஆகவே, வானமும் பூமியும் அவர்களுக்காக அழவில்லை; அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படவும் இல்லை." (24:49)
இந்த வசனம் குறித்து ஒருவர், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "வானமும் பூமியும் யாருக்காகவேனும் அழுமா?" என்று கேட்டார்.
அதற்கு அவர்: "ஆம், ஒவ்வொருவருக்கும் வானத்தில் ஒரு வாசல் இருக்கிறது. அதன் வழியாகவே அவரது வாழ்வாதாரம் இறங்குகிறது. அதன் வழியாகவே அவரது செயல்கள் மேலேறுகின்றன.
ஒரு முஸ்லிம் மரணிக்கும்போது; அவனது செயல்கள் ஏறிய, வாழ்வாதாரம் இறங்கிய வானத்தின் அவனது வாசல் மூடப்படும். அது அவனுக்காக அழும். அத்துடன் பூமியில் அவன் தொழுத இடமும், அல்லாஹ்வை நினைவுகூர்ந்த இடமும் அவனை இழக்கும்போது அவனுக்காக நாற்பது நாட்கள் அழும்"
அவர்: "பூமி அழுமா?”
இப்னு அப்பாஸ் (ரலி): "ஆச்சரியமாக இருக்கிறதா?! குனிந்து, சிரம் பணிந்து பூமியை நிரப்பிய ஓர் அடியானுக்காக பூமி ஏன் அழாது?!” (தஃப்ஸீர் இப்னு ஜரீர்)
உங்கள் இடத்தையும் உங்கள் அறையையும்.. தொழுகை, இறை நினைவு, அல்லாஹ்வின் வேதத்தை ஓதுதல் ஆகியவற்றால் தினமும் நீங்கள் நிரப்புகிறீர்கள்.
ஒருநாள் நீங்கள் நிரந்தரமாக அதிலிருந்து விடைபெறும்போது உங்களுக்காக அவை நிச்சயம் அழும்.
பல ஆண்டுகளாக நீங்கள் வசித்த உங்கள் வீடும் உங்கள் அறையும் உங்களை நினைத்து ஏங்கும்.
ஆகவே எப்போதும் நீங்கள் மறக்காமல் கேட்கவேண்டிய பிரார்த்தனை:
"இறைவா! உன்னிடம் நல்ல முடிவைக் கேட்கிறேன்.”
✍️ நூஹ் மஹ்ழரி

Post a Comment