இந்திய வீரர் அவுஸ்திரேலியா அணியில் இடம்பிடித்தது எப்படி..?


ஒரு நாட்டுக்குச் சுற்றுலா செல்லும் ஒருவர், அங்கேயே தங்கிவிடுவார் என்றும், ஒரு உணவகத்தில் வேலை பார்ப்பார் என்றும், தபால் சேவையில் பணியாற்றிக்கொண்டே தனது விளையாட்டுக் கனவைத் தொடர்வார் என்றும் யாராவது எதிர்பார்த்திருப்பார்களா? அதிலும், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அல்ல, உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் வெற்றிக்குக் காரணமான வீரராக மாறுவார் என்று நினைத்துப் பார்க்க முடியுமா?


இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தனது வாழ்க்கைப் பயணத்தின் மூலம் பதிலளித்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதான நிகில் சௌத்ரி.


மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது இருபதுகு்கு - 20 சர்வதேசப் போட்டியில் நிகில் சௌத்ரி வெளிப்படுத்திய ஆட்டம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் பேசுபொருளாகியுள்ளது.


ஒரு சுற்றுலாப் பயணியின் வாழ்க்கையை மாற்றிய கொரோனா!


இந்தியாவின் டெல்லியில் பிறந்த நிகில் சௌத்ரி, இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடியவர். அப்போது இந்திய அணியின் தற்போதைய நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுடனும் இணைந்து விளையாடியுள்ளார்.


2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது 24ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குச் சென்றார். மார்ச் 15 ஆம் திகதி அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த அவர், மே 6 ஆம் திகதி இந்தியா திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டையும் முன்பதிவு செய்திருந்தார்.


ஆனால், அவர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற சில நாட்களிலேயே கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தீவிரமடைந்தது. சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.


இந்த எதிர்பாராத சூழல்தான் அவரது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்துக்கு வழிவகுத்தது.


இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் எப்போது மீண்டும் ஆரம்பமாகும் என்பது நிச்சயமற்றதாக இருந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் சில மாதங்களிலேயே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகின. இதனால் பிரிஸ்பேனில் உள்ள கிரிக்கெட் கழகமொன்றில் விளையாடத் தொடங்கினார்.


அவரது திறமையை அடையாளம் கண்ட உள்ளூர் கழகங்கள் முதலில் இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை வழங்கின. அங்கிருந்து படிப்படியாக தனது திறமையை நிரூபித்து முன்னேறினார்.


கிரிக்கெட்டுடன் போராடிய இன்னொரு வாழ்க்கை!


நிகில் சௌத்ரியின் பயணம் மைதானத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை.


சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியா சென்ற அவர், பின்னர் மாணவர் விசாவைப் பெற்று மூன்று ஆண்டுகள் கல்வி கற்றார். தோட்டக்கலைத் துறையில் கல்வியைத் தொடர்ந்து பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார்.


வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக மெக்சிகன் உணவகம் ஒன்றில் மூன்று மாதங்கள் பணியாற்றினார். பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் அவுஸ்திரேலியா போஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே கிரிக்கெட்டையும் தொடர்ந்து விளையாடினார்.


பகலில் வேலை, அதற்கிடையில் பயிற்சி, கிடைக்கும் நேரங்களில் கிரிக்கெட் போட்டிகள் என அவரது வாழ்க்கை அமைந்திருந்தது.


அவுஸ்திரேலிய உள்ளூர் மற்றும் கழக மட்டப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், படிப்படியாக உயர்ந்த நிலையை அடைந்தார். பின்னர் பிக் பாஷ் லீக்கிலும் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.


மெல்போர்னில் உலகைக் கவர்ந்த 66 ஓட்டங்களும் இரண்டு விக்கெட்டுகளும்!


கடந்த சனிக்கிழமை ( 21 -11-2026) நடைபெற்ற அவுஸ்திரேலியா – இங்கிலாந்து முதலாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டி நிகில் சௌத்ரியின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய முக்கியமான தருணமாக அமைந்தது.


முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணித்தலைவர் ஹாரி புரூக் 28 பந்துகளில் 65 ஓட்டங்களைக் குவித்து அதிரடி காட்டினார்.


இந்நிலையில், சுழற்பந்துவீச்சில் அசத்திய நிகில் சௌத்ரி நான்கு ஓவர்களில் 21 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி இரண்டு முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக்கின் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். பின்னர் சாம் கரனையும் ஆட்டமிழக்கச் செய்தார்.


188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தச் சூழலில் நான்காவது வீரராகக் களமிறங்கிய நிகில் சௌத்ரி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.


38 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 66 ஓட்டங்களைக் குவித்தார். அவரது அதிரடி ஆட்டம் அவுஸ்திரேலிய அணியை வெற்றியின் விளிம்புக்குக் கொண்டுசென்றது.

No comments

Powered by Blogger.