வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அனைத்து சலுகைகளையும் தடையின்றி வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்


 நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.


ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நலன்புரித் திட்டங்களின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.



அந்த ஊழியர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டம்  மற்றும் கடன் வசதித்திட்டம் என்பன தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் தீர்வை வரி விலக்கு  (Duty Free)  வசதிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுத் தொகுப்பைப் பராமரிப்பதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் மூலம் அவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை மிகவும் முறைப்படுத்தப்பட்ட மற்றும் செயற்திறனான முறையில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.