பிரதியுபகாரம் செய்யப்பட முடியாத இலங்கையின் (புத்தளத்து) அன்சாரிகள்
அவர்களில் சுமார் 53000 பேர் வரை புத்தளத்தில் தஞ்சமடைந்தார்கள்.
வந்தாரை வாழவைத்த பூமி புத்தளத்துக்கும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற ஊர்களுக்குமிடையே புராதன காலத்திலிருந்தே தொடர்புகள் காணப்பட்டன. புத்தளம், யாழ்ப்பாணம், களனி, மாத்தறை போன்ற ஊர்களில் வாழ்ந்த சோனகர்களே இலங்கையின் ஏனைய ஊர்களுக்கும் பரவி அங்கெல்லாம் சோனகர் சமூகங்களை உருவாக்கினார்கள். சோனகர், நாகர்கள் என அழைக்கப் பட்ட இலங்கையின் மூத்த குட்டிகளை சேர்ந்தவர்களாவர். சுவன நாகர்கள் என அழைக்கப் பட்ட இவர்கள் ஒரு சமூகத்துடன் இன்னொரு சமூகம் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு பட்டுள்ளது என்பது வரலாறாகும்.
விஜயன் இலங்கை வருவதற்கு முன்பே புத்தளம் முதல் மன்னார் வரையான பிரதேசம் சோனகர் பட்டணம் என அழைக்கப் பட்டது. கி.மு 3 ஆம் நூற்ரான்டில் இலங்கை விஜயம் செய்த தொலமி இலகுகையின் படத்தை வரைந்த போது அதில் புத்தளம் முதல் மன்னார்வரையான பகுதியை சோனா பட்டோம்ஸ (சோனகர் பட்டணம்) என குறித்ததிலிருந்து இங்கே சோனகர் விஜயனுக்கு முன்பே வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறியலாம்.
பல நூற்ராண்டுகளுக்கு முன்னர் புத்தளம் முதல் மன்னார் வரையான பிரதேசம் பொன்பரப்பி, தாமிர பரணி (தம்ப பண்ணி) எனவும் அழைக்கப் பட்டது. இந்த பிரதேசம் ஒரு காலத்தில் வெள்ளைப் பெருக்கினால் அழிவடைந்ததாக ஷாஜஹான் ஆசிரியர் எழுதிய புத்தளத்தில் வரலாறு நூல் குறிப்பிடுகின்றது.
இந்த சோனகர் (சுவன நாகர்) இலங்கையின் களனி பிரதேசம், யாழ்ப்பாண தீவுகள் போன்ற இடங்களிலும் காணப் பட்டுள்ளனர். இவர்களுக்கிடையே தொடர்புகள் இருந்ததுண்டு.
எல்லா முஸ்லிம் ஊர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்று விளங்குகின்றன. புத்தளம் முஸ்லிம்களின் பிரத்தியேக தன்மை என்னவென்றால் அவர்களுடைய ஊருக்கு யார் வந்தாலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று ஸலாம் சொல்லி பழகுவார்கள். 1258 முதல் 1278 வரை யாழ்ப்பாணத்தை ஆண்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தி சுல்தான் தாக்கியுத்தீன் அப்துல் ரஹ்மான் அவர்களும் அவருடன் வந்த ஆப்கானிஸ்தான் படையினரும் யாழ்ப்பாணத்தை கைவிட்டு (துறந்து) புத்தளத்தில் காணப் பட்டதாக ஷாஜஹான் ஆசிரிய குறிப்பிடுகின்றார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் குருநாகல் முதல் புத்தளம் வரையான பிரதேசம் இருந்ததாக மகா வம்சம் கூறுகின்றது. ஆரியச் சக்கரவர்த்தி மூலம் யாழ்ப்பாணம் புத்தளத்துக்கு இடையே ஒரு தொடர்பு இருந்துள்ளது.
இதனால் தான் 1333 இல் , மூன்றாவது ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் இபுனு பதூதா வந்த போது அவரை பாவா ஆதம் மலைக்கு புத்தளம் ஊடாக அனுப்ப முடிந்தது. தொடர்ந்து 1620 இல் யாழ்ப்பாணத்தை வெளியேறி அல்லது பின்வாங்கி மன்னார் முல்லைத்தீவு வவுனியா புத்தளம், சிலாபம் , மாதம்பை போன்ற இடங்களை ஆட்சி செய்த வன்னி மன்னன் காதர் மீரா இந்த பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைந்திருந்ததாகவும் அவரை மாதம்பையில் இடம்பெற்ற சண்டையில் சிங்கள படை வெற்றி கொண்டதாகவும் காதர் மீரா பின்னர் தனது நிலப்பரப்பை சுருக்கிக் கொண்டதாகவும் மகாவம்சம் கூறுகின்றது.
இவரை காக்கா என்றும் காக்கா பந்தர் வன்னியன் என்றும் அழைப்பார்கள். இவருடைய காலத்திலும் யாழ்ப்பாணம் மன்னர் முல்லைத்தீவு என்பன புத்தளத்துடன் தொடர்புகளை கொண்டிருந்துள்ளன.
இது ஒரு தொப்புள் கோடி உறவாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் யாழ்ப்பாணம் மன்னார், வவுனியா , முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு வந்த போது புத்தளத்து மக்கள் அவர்களை உடன்பிறந்த சகோதரர்களை வரவேற்பது போன்று வரவேற்று சகல வசதிகளும் செய்து கொடுத்தார்கள். எங்கே செல்கிறீர்கள் என்று வவுனியாவில் வைத்து உதவி செய்ய வந்த பல்வேறு ஊர் முஸ்லிம் சகோதரர்களிடம் புத்தளத்தில் எங்களை இறக்கி விடுங்கள் என்று நம்பிக்கையுடன் கூறிய பெயர் புத்தளம் ஆகும் .
புத்தளத்து மக்களின் இந்த வரவேற்பு முஹம்மது நபி (ஸல் ) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் மதீனா வாழ் முஸ்லிம்கள் வரவேற்ற நிகழ்வுக்கு ஒப்பாக கருதப் படுகின்றது.
1990 ஆம் ஆண்டு கால் நடையாகவும், லாரிகள் மூலமாகவும் கொண்டுவர பட்டு இறக்கி விடப்பட்ட முஸ்லிம்களை இன்முகத்துடன் வரவேற்றவர்கள் புத்தளத்து முஸ்லிம்கள். புத்தளம் வந்த 45000 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு தமது பாடசாலைகள் , பொது கட்டிடங்கள், மதரஸாக்கள் , தென்னம் தோட்டங்கள், உப்பள காணிகள் போன்றவற்றை மகிழ்ச்சியுடன் வழங்கி அகதியாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். புத்தளம் மாவட்டத்தில் மட்டும் 1990 முதல் 2002 வரை 202 இடம்பெயர்ந்தோர் தங்கும் முகாம்கள் காணப் பட்டன. அந்த முகாம்களில் சுமார் 6500 குடும்பங்களை சேர்ந்த 40000 பேர் வசித்தார்கள். மேலும் சுமார் 4000 குடும்பங்களை சேர்ந்த 15000 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் சில பரோபகாரிகள் வழங்கிய வீடுகளிலும் புத்தளம் மாவட்டத்தில் தங்கியிருந்தார்கள். அந்த வகையில் வடபுல முஸ்லிம்களின் இரண்டாவது தாயகமாக புத்தளம் காணப்படுகிறது.
இடம்பெயர்ந்து வந்தவர்களை முதலில் வரவேற்ற பூமி இக்கிரிகொல்லவா ஆகும். அவர்களும் மகிழ்ச்சியுடன் அகதிகளை வரவேற்றார்கள். பாடசாலைகள் , பொது கட்டிடங்கள், மதரஸாக்கள் , பள்ளிவாசல் காணி போன்றவற்றில் சுமார் ஐநூறு குடும்பங்களை சேர்ந்த மக்களை தங்க வைத்து உணவும் உறையுளும் வழங்கினார்கள். தொடர்ந்து வந்து பெருந்தொகை மக்களில் சிலருக்கே அங்கே இடம் போதுமானதாக இருந்தது. தொடர்ந்து மதவாச்சியில் சுமார் இருபது குடும்பங்கள் தங்க இடம் வழங்கப் பட்டார்கள்.
இன்னும் சிலர் அனுராதபுரத்தில் வரவேற்கப் பட்டார்கள். வாறு அனுராதபுரத்தில் சுமார் நாற்பது குடும்பங்கள் அடைக்கலம் பெற்றனர். சிலர் குருநாகல் அரக்கியாவை போன்ற ஊர்களுக்கு சென்றார்கள். அனுராதபுரம் தாண்டி வந்தவர்களில் சுமார் 200 குடும்பங்களை நொச்சியாகம முஸ்லிம்கள் வரவேற்று தங்க இடம் வழங்கி பிறகு தற்காலிக கொட்டில்களையும் அமைத்து கொடுத்தார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி வந்த சுமார் 45000 மக்கள் புத்தளம் வந்தனர். புத்தளம் நிந்தனை தேங்கய் எண்ணெய் ஆலை கட்டிடம், பாத்திமா கல்லூரி வளாகம், சின்ன ஸாஹிரா, பெரிய ஸாஹிரா கல்லூரிகள், உப்பளம் பகுதி முதல் இஸ்மாயீல் புறம் வரை , தில்லையடி, பாலாவி, மதுரங்குளி, கடையாமோட்டை, சமீரகம, கொற்றாந்தீவு, உலுக்காப்பள்ளம் போன்ற இடங்களிலி இருந்த பாடசாலைகள் , பொது கட்டிடங்கள், மதரஸாக்கள் , பள்ளிவாசல் காணி போன்றவற்றில் இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள்.
புத்தளத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படவே லாரிகள் புத்தளத்தை தாண்டி சென்றன. அவ்வாறு சென்றவர்களை புளிச்சாக்குளம், ஆனவிருந்தாவ, தாரக்குண்டு , போன்ற பிரதேச மக்கள் வரவேற்றார்கள். அங்கும் இடப்பற்றாக்குறை ஏற்படவே மக்கள் சிலாபம் ஜெயபீம போன்ற இடங்களை நோக்கிச் சென்றார்கள்.
அங்கும் இடப்பற்றாக்குறை ஏற்படவே மக்கள் நீர் கொழும்பு நோக்கி சென்றார்கள். நீர் கொழும்பிலும் பலவத்துறையிலும் முஸ்லிம்கள் இன்முகத்துடன் வரவேற்கப் பட்டார்கள். நண்டு ஹாஜியார் வீடு, போன்ற சில வீடுகள் அங்கே தற்காலிகமாக தங்குமிடமாக வழங்கப் பட்டது. பின்னர் நீர் கொழும்பு பள்ளிவாசல் நிர்வாகம் மையவாடி காணியில் ஒரு கட்டிடத்தை கட்டி அதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை குடியேற்றி பராமரித்தது. இவ்வாறு நீர்கொழும்பில் சுமார் 100 குடும்பங்களும் பலவத்துறையில் 160 குடும்பங்களும் ஆரம்பத்தில் தற்காலிகமாக பொது இடங்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.
முஸ்லிம்கள் துரத்தப் பட்டார்கள் என்று கேள்வி பட்ட கொழும்பு வெள்ளவத்தை, மாளிகாவத்தை, மட்டக்குழி சகோதரர்கள் தமது லொறிகளை எடுத்துக் கொண்டு வவுனியா வரை சென்று சில குடும்பங்கள் அழைத்து வந்து அந்த இடங்களில் காணப் பட்ட வை எம் எம் ஏ கட்டிடம் போன்ற பொது கட்டிடங்களில் இடம்பெயன்ற்து வந்த முஸ்லிம்களை தங்க வைத்து உணவு உடை போன்றவற்றை வழங்கி பல மாதங்கள் அவர்களை பராமரித்தார்கள். அவ்வாறு சுமார் 400 குடும்பங்கள் கொழும்பிலிருந்து நான்கு முகாம்களில் தங்கியிருந்தனர்.
இன்னும் பல குடும்பங்கள் ஏற்கனவே வேறு ஊர்களில் வாழ்ந்த தமது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் புகுந்தனர். இவ்வாறு பாணந்துறை, பேருவில காலி மாத்தறை, அளுத்கம, திகாரி, மாவனல்லை, கண்டி , அக்குறணை, சாய்ந்த மறுது, கல்முனை போன்ற ஊர்களுக்கும் சென்று நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்தனர்.
இன்னும் பலர் விடயத்தை கேள்விப்பட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று அகதிகளை தம்முடன் வருமாறு கூறி அவர்களுக்கு தங்குமிடங்களையும் ஏனைய வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
இந்த இனச் சுத்திகரிப்பு வெளியேற்றம் உறவுகளை பிரித்தது. தாயையும் பிள்ளைகளையும் பிரித்தது. சகோதரர்களை பிரித்தது. அவ்வாறு பிரிந்தவர்கள் யார் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் போக்குவரத்து செய்ய பணமும் இல்லாமல் பல மாதங்கள் திண்டாடினார்கள். சிலர் தமது தாயை இரண்டு வருடத்தின் பின்னர் சந்தித்தவர்களும் உள்ளனர். அந்த நிகழ்வு மஹசர் மைதானத்தின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவரும்.
இவ்வாறு அகதியாக வந்த வடபுல முஸ்லிம்களை வரவேற்று அவர்களுக்கு தங்குமிடம், உணவு, மாற்றுடை, கல்வி, கற்றல் சாதனங்கள் போன்றவற்றை வழங்குவதில் ஏராளமானவர்கள் தங்கள் பங்களிப்பை செய்துள்ளார்கள்.
இவை மறக்க முடியாத ஒரு உதவிகள் மட்டுமல்ல இவற்றுக்கு என்ன பிரதி உபகாரம் செய்தாலும் அவை அகதியாக வந்த மக்களுக்கு ஊர் வாசிகள் செய்த அந்த நேரத்து உதவிகளுக்கு எவ்வகையிலும் ஈடாகாது. இருந்த போதிலும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் 36 வைத்து வருடத்தை கனத்த இதயத்துடன் அடையும் இவ்வேளை இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களுக்கு உதவி செய்த சகோதரர்களையும் சகோதரிகளையும் நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
அவற்றுக்கான பிரதியுபகாரத்தை செய்யக் கூடியவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.
யா அல்லாஹ் 75000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் கையில் 200 ரூபாய் பணத்துடன் வந்த சமயம் யார் யாரெல்லாம் அவர்களுக்கு உதவி செய்தார்களோ அவர்களுக்கு மேலான சுவனத்தை கொடுப்பாயாக! மேலும் யார் யாரெல்லாம் வசதி அற்றவர்களாக இருந்த நிலையிலும் இந்த முஸ்லிம்களை புன்னகையுடன் வரவேற்றார்களோ அவர்களுக்கும் மேலான சுவனத்தை கொடுப்பாயாக! இன்னும் யார் யாரெல்லாம் மனதளவில் இவர்களது துன்பத்தை நீக்குவாயாக என்று உன்னிடம் பிரார்த்தித்தார்களோ அவர்களுக்கும் மேலான சுவனத்தை கொடுப்பாயாக!
ஆமீன் யா ரப்பில் ஆலமீன்.
எம்.எஸ்.எம். ஜான்ஸின் BBA Hons , ACA
வியாபார முகாமை ஆலோசகர் மற்றும் ஆய்வாளர்.

Post a Comment