பாஜக அரசின் மிகக் கடும் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள பள்ளிவாசல்


 இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரேஸ் கோர்ஸ் பள்ளிவாசல்', தற்போது பாஜக அரசின் மிகக் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளது.  


1977-ஆம் ஆண்டின் டெல்லி அரசிதழில் அதிகாரப்பூர்வ வக்ஃப் சொத்தாகவும், புதுடெல்லி நகராட்சி மன்றத்தின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ள இந்த நூற்றாண்டு பழைமையான பள்ளிவாசலுக்கு ஒன்றிய அரசின் நிலம் மற்றும் வளர்ச்சி அலுவலகம் "ஆக்கிரமிப்பு" என்று கூறி காலி செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், நிலத்தடி நீர் மற்றும் மின்சார விநியோகத்தையும் அதிகாரிகள் அதிரடியாகத் துண்டித்துள்ளனர்.  


புதுடெல்லியின் லூட்யன்ஸ் பகுதியில் பிரதமர் இல்லத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த ரேஸ் கோர்ஸ் பள்ளிவாசல் மற்றும் அதை ஒட்டியுள்ள அடக்கஸ்தலம் ஆகியவை 1977-ஆம் ஆண்டின் டெல்லி அரசிதழ் பதிவின் படியும், 2021-ல் நடத்தப்பட்ட உத்தியோகபூர்வ ஆய்வுகளின் படியும் இது அங்கீகரிக்கப்பட்ட வக்ஃப் சொத்தாகும். 2021 ஆய்வில் இது "ஆக்கிரமிப்பு" என்று குறிப்பிடப்படவே இல்லை.


NDMC-யின் உத்தியோகபூர்வ இணையதளத்திலேயே இது அறிவிக்கப்பட்ட பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


இத்தனை ஆதாரங்கள் இருந்தபோதிலும், "மத்திய அரசின் நிலத்தில் இந்த அமைப்பு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது" என்று கூறி, உடனடியாக இடத்தைக் காலி செய்யுமாறு மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிலம் மற்றும் வளர்ச்சி அலுவலகம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.


நோட்டீஸ் அனுப்பியதுடன் நிற்காமல், உள்ளூர் அதிகார அமைப்புகள் பள்ளிவாசலுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளைத் துண்டித்துள்ளன.


பள்ளிவாசலின் இமாம் வெளியிட்ட வீடியோ பதிவில், "கடந்த 6 மாதங்களாக வக்ஃப் வாரியத்திடம் உதவி கேட்டு முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. மின்சாரமும் தண்ணீரும் துண்டிக்கப்பட்டுவிட்டது. தொழுகைக்கு வருபவர்களுக்கும், குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; பள்ளிவாசலுக்குச் செல்லும் பாதைகளும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


2026 அக்டோபர் 15 அன்று டெல்லி உயர் நீதிமன்றம், பள்ளிவாசலின் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகளை மீண்டும் வழங்கக் கோரிய இமாம் முகமது ஹாரூனின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. The Indian Express அக்டோபர் 23 அன்று இதுகுறித்து விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது. 


ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாத்துதீன் ஒவைசி, ஜமியாத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்டோர் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜமியாத் பிரதிநிதிகள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.


இந்தப் பள்ளிவாசல் விவகாரம் என்பது பாஜக அரசின் பரந்த அரசியல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.


வக்ஃப் வாரியங்களின் அதிகாரத்தைப் பறித்து, வக்ஃப் சொத்துக்களை "அரசு நிலம்" என்று அறிவிக்கும் அதிகாரத்தை ஆட்சியாளர்களிடம் கொடுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைச் சுற்றியான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  


டெல்லியின் மத்தியப் பகுதியில் உள்ள சுனேரி பாக் மஸ்ஜித் முதல், பல நூற்றாண்டுகள் பழமையான மசூதிகள் மற்றும் தர்காக்கள் வரை "போக்குவரத்து நெரிசல்" அல்லது "ஆக்கிரமிப்பு" என்ற பெயரில் அகற்றுவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.


நாட்டின் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களை மறைக்கவும், தங்களின் தீவிர வலதுசாரி வாக்கு வங்கியைக் திருப்திப்படுத்தவும், பிரதமர் இல்லத்திற்கு அருகிலேயே உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலைக் குறிவைத்து பாஜக அரசு காய்களை நகர்த்துகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.


நூற்றாண்டு பழைமை வாய்ந்த, அரசிதழில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழிபாட்டுத் தலத்திற்கே குடிநீரையும் மின்சாரத்தையும் துண்டித்து, ஆக்கிரமிப்பு என்று நோட்டீஸ் ஒட்டும் நிலைமை தலைநகர் டெல்லியிலேயே நடக்கிறது என்றால்... அண்டை நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளும் சொத்துக்களும் எந்தளவுக்குப் பாதுகாப்பற்ற சூழலில் தள்ளப்பட்டுள்ளன என்பதற்கு இந்த ரேஸ் கோர்ஸ் பள்ளிவாசல் சம்பவமே சோகமான சான்றாகும்!

✍️ Abdullah Ibnu Naseer 

No comments

Powered by Blogger.