திறைசேரியில் டிரில்லியன் கணக்கில் பணம் - அநுரகுமார பெரும் சந்தோசம்


கடந்த காலங்களில் அரசாங்கத்திடம் பணம் இல்லாததால், தொடர்ச்சியாக பணத்தை அச்சிட அல்லது வங்கி கட்டமைப்பிலிருந்து கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 2022 காலப்பகுதியில் திறைசேரிக் கணக்கு சுமார் 700 பில்லியன் ரூபா எதிர்மறை  மட்டத்தில் காணப்பட்ட போதிலும், இன்று திறைசேரிக் கணக்கில் சுமார் ஒரு டிரில்லியன் ரூபா மேலதிக நிதி காணப்படுகிறது. இதன் மூலம் நிலவிய ரூபா நெருக்கடி கணிசமான அளவு தீர்க்கப்பட்டுள்ளது.


நாட்டிற்கு தேவையான டொலர்களை ஈட்ட முடியாமையே நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது. 2025ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கின் இருப்பு - அதாவது நாட்டிற்குள் வரும் மற்றும் வெளியேறிய டொலர் தொகைக்கு இடையிலான வேறுபாடு- மிக முக்கியமான நிலையை அடைந்தது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் நடப்புக் கணக்கில் மூன்று சந்தர்ப்பங்களில் மாத்திரமே மேலதிகமான  நிதி  காணப்பட்டன. அச்சந்தர்ப்பங்களில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் மட்டுமே அதிகரிப்பு காணப்பட்டது. ஆனால் 2025இல் நமது நடப்புக் கணக்கு 1800 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்தது. 


எனினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர்ச் சூழலினால் நாம் எதிர்பாராத தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு எண்ணெய் இறக்குமதிக்காக 4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், இம்முறை ஆகஸ்ட் மாத முடிவிலேயே 4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. ஆண்டின் மூன்றில் இரண்டு காலப் பகுதியில் 4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதால், ஆண்டின் இறுதியில் அது 6 பில்லியன் டொலர்களைத் தாண்டக்கூடும். எனவே, டொலர்களுக்கான அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதே நமது பிரதான சவாலாகும்.


பத்தரமுல்ல ஹோட்டலில் இன்று (23)  நடைபெற்ற அரச நில அளவையாளர் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.