நியாயமா...?




மக்காவின் புனிதப் பள்ளிவாசலில் அநாகரிகமாக நடந்துகொண்ட ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது எனும் செய்தி சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகி உள்ளது.


சவூதி அரசின் காட்டுமிராண்டித்தனம் என்றும், அநாகரிகமான செயலுக்கு மரண தண்டனையா? என்றும் சிலர் கேட்கிறார்கள்.


இங்கே ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்: உலக முஸ்லிம்களால் மிகவும் புனிதமாக மதிக்கப்படும் இடங்கள்தான் மக்காவும், மதீனாவும்.


அங்கு பல்வேறு வகையான மக்கள் வருவார்கள். அப்படி வரும்போது ஹரமுக்குள் எவரேனும் வரம்பு மீறினால், காமிரா மூலம் கண்டுபிடித்து, உடனடியாக அதற்கான சிகிச்சை (?) கொடுத்து, விசாவை ரத்து செய்து திருப்பி அனுப்புவார்கள். இதுதான் வழமையாக நடைபெறும் நடவடிக்கை.


புனிதப் பள்ளிவாசலில் தவறான செயலில் ஈடுபட்டால் தண்டனை நிச்சயம். சட்டத்தை செயல்படுத்தும் விஷயத்தில் அவர்கள் பாராபட்சம் பார்க்கமாட்டார்கள்.


முகநூல், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற வலைத்தளங்களில் யார் கொதித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.


இந்தத் தண்டனைக்காக இந்தியாவில் இருந்தும் சிலர் கொதிக்கிறார்கள். 


நன்றாக யோசித்துப் பாருங்கள்.. நமக்கு அந்த அருகதை இருக்கிறதா? நம் தேசம் எப்படிப் பட்டது? 


மாட்டு இறைச்சி வைத்திருந்தார் என்பதற்காக அப்பாவியை அடித்துக் கொன்ற தேசம்.


கெளரவக் கொலையும், ஆணவக் கொலையும் சாதாரணமாக நடைபெறும் தேசம்.


ஐந்து வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டி வரை வயது வரம்பு பாராமல் கற்பழிக்கும் தேசம்.


கடவுளின் கருவறையில் வைத்துகூட கற்பழிக்கும் கோழைகள் வாழும் தேசம்.


கோவில் பணத்தை கொள்ளையடிக்கும் தேசம். 


குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் எந்தத் தண்டனையும் இல்லாமல் நெஞ்சு நிமிர்த்தி சிறையில் இருந்து வெளிவரும் தேசம்.


வெளியே வந்து அடுத்த பெண்ணை கற்பழிக்க முயற்சிக்கும் கூட்டம் வாழும் தேசம்.


குற்றவாளிகள் எல்லாம் எம்.பி, எம். எல். ஏ. பதவிகளைப் பெறும் தேசம்.


அந்த இருவரும் பரிசுத்த ஹரம் ஷரீஃபில் ஆபாசச் செயலில் ஈடுபட்டது முழுக்க முழுக்க கயமைத்தனம்.


இஸ்லாத்தைப்பொறுத்தவரை விபச்சாரத்திற்கு தண்டனை கொடுக்க கண்ணால் கண்ட நான்கு சாட்சிகள் வேண்டும். காரணம், நான்கு பேர் பார்க்கும் வண்ணம் அத்தகைய ஈனச் செயலை இருவர் செய்கிறார்கள் என்றால் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதுதான்.


அப்படியிருக்க; ஹரம் ஷரீஃபில்.. அதுவும் பலநூறு மக்கள் முன்பாக.. பல கேமராக்கள் கண்காணிக்கும் என்று தெரிந்தும்.. அவ்வாறு நடந்துகொண்டார்கள் என்றால்? அவர்களை கொஞ்சுவார்களா? 


தண்டனை என்பது குற்றச் செயலில் ஈடுபடும் மக்களுக்கானது மட்டுமல்ல. மாறாக அவ்வாறு ஈடுபடக் கூடாது எனும் மற்றவர்களுக்கான எச்சரிக்கையும்தான்.


இத்தகைய தண்டனைகள் இல்லையென்றால்.. பின்னர் அந்தப் பள்ளிவாசலை புனித ஹரம் ஷரீஃப் என்று அழைப்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?


அவர்கள் உண்மையான தம்பதியர் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். உண்மையிலேயே கணவன் மனைவியாக இருந்தாலும் அத்தகைய செயலை அங்கே செய்யக் கூடாது.

நமது நாட்டைப் போன்று ஓர் அப்பாவியை பிடித்து அடித்து, குரூரமாக தண்டித்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்யும் வேடிக்கை எதுவும் சவூதியில் இல்லை.


எது எவ்வாறு இருப்பினும்.. புனிதப் பள்ளிவாசலில் வைத்துதான் அந்த ஈனச் செயலில் ஈடுபட வேண்டுமா என்பதுதான் கேள்வி. இதுபோன்ற கேவலச் செயல்களில் ஈடுபட எத்தனையோ இடங்கள் உண்டு. பார்க், பீச், ஹோட்டல் என்று வேறு எங்கேனும் செய்திருக்கலாம்.


அப்படி இருந்தும் ஹரமில் ஈடுபட்டதற்கான தண்டனைதான் அவர்களுக்கு இப்போது கிடைத்துள்ளது. 


அதுவும் 3 வருடம் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 


அப்படியெல்லாம் தண்டிக்கக் கூடாது என்று சில கேரள முஸ்லியார்கள் பொங்குவதுதான் ஆச்சரியம்.


ஹரம் ஷரீஃபில் அத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை மன்னித்தால்.. அதையே சாக்காக வைத்து.. இங்குள்ள பள்ளிவாசல்களிலும் புனித இடங்களிலும் அதுபோன்ற கேடுகெட்ட செயல்களை அரங்கேற்றலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. 


ஹரம் ஷரீஃப் குறித்த அல்லாஹ்வின் எச்சரிக்கை: "மேலும் எவர்கள் இந்த (மக்கா) மஸ்ஜிதில் நேர்மை தவறிக் கொடுமை இழைக்கின்றார்களோ அத்தகையவர்களுக்கு நாம் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்''. (22:25)


✍️ நூஹ் மஹ்ழரி (இந்தியாவைச் சேர்ந்த உலமா)


No comments

Powered by Blogger.