Header Ads



பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் - முஸ்லிம் சமூகம் சார்பில் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் வலியுறுத்து


இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டமானது முழுமையாக நீக்கப்பட வேண்டும் என மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். கடந்த (11) மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்களின் தலைமையில் ஜுன் மாத மாதாந்தக் கூட்டம் நடைபெற்றது. இதன் போது அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மாநகரசபை உறுப்பினர் கௌரவ.நா.குமணதாசன் அவர்கள் கொண்டு வந்த கண்டனத்தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றும் போதே மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் அவர்கள் மேற்குறிப்பிட்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.


அவர் மேலும் உரையாற்றுகையில் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களை நசுக்குவதற்கும், அவர்களின் உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கையாண்டு தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களை தனித்தனியாக இனரீதியாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும், பல பிரயோகங்களை கையாண்டும் அடக்கி ஒடுக்கும் முறைமைகளை அவ்வப்போது ஆட்சி பீடம் ஏறும் சிங்கள அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் மேற்கொண்டு வருகின்றமை யாரும் மறுக்க முடியாத உண்மை.


இந் நிலையிலேயே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் இடம்பெற்ற சொல்லிசை பாடகர் சங்கீத்சன் அவர்களின் கைதும் நிகழ்ந்துள்ளது. மனித உரிமைகளை மீறும் வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி இடம்பெற்ற இக் கைது நடவடிக்கையை யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் சார்பிலும், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பிலும் வண்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறான கைதுகள் இனி எப்போதும் நிகழக் கூடாது என்பதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், இச் சட்டத்தை அரசு முழுமையாக நீக்க வேண்டும் என்றும் அரசிற்கு தொடர் அழுத்தத்தை கொடுக்க சர்வதேச சமூகமும், அரசியல் கட்சிகளும் மற்றும் சிவில் சமூகம், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களும் இணைந்து கூட்டாக முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


பயங்கரவாத சட்டம் தனியே தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி அவ்வப்போது சிங்கள அரசாங்கங்கள் தமது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பெரும்பான்மை சமூகத்திலும் இச் சட்டத்தை பயன்படுத்தி ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்தித்திற்கு எதிராக பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையையும் இங்கு மறந்து விட முடியாது. எனவே மனித உரிமைகளுக்கு எதிராகவுள்ள இச் சட்டத்தை முழுமையாக நீக்க அனைவருமாக அணிதிரள வேண்டும் என்றும், இவ் விடயத்தில் இலங்கை வாழ் மக்கள் தமக்குள் பிரிந்து விடாமல் இனம், மதம், மொழி, சாதி, கட்சி, பிரதேசம் என்று பிரிந்து விடாமல் ஒன்றித்து இணைந்து முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.