Header Ads



2026 உலகக் கோப்பை: சவுதி அரேபியா கொடி, பலரால் உயர்த்திப் பிடிக்கப்படுவது ஏன்..?


2026 உலகக் கோப்பை தொடரில் வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதங்கள் பாடும்போது இரு நாடுகளின் கொடியும் தரையில் விரிக்கப்பட்டிருக்கும். ஆனால், சௌதி அரேபியா  கொடி பலரால் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருந்தன.


சௌதி அரேபியா விளையாடும் போட்டிகளில் மட்டும் கொடிகளை உயர்த்திப் பிடிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவது ஏன் என்ற கேள்வி வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.


சௌதி அரேபியாவின் தேசியக் கொடி வெறும் ஒரு நாட்டின் அடையாளமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை, அது ஒரு புனித சின்னமாகப் பார்க்கப்படுகிறது. இஸ்லாத்தின் மிக அடிப்படையான விசுவாசப் பிரகடனமாகக் கருதப்படும் ஷஹாதா (Shahada) சௌதி அரேபியாவின் கொடியில் எழுதப்பட்டிருக்கும்.


அந்த ஷஹாதா என்பது இஸ்லாம் மதத்தின் ஐந்து தூண்களில் முதலாவதாக கருதப்படுகிறது. "வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது நபி அவர்கள் அல்லாவின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்" என்ற பொருள் கொண்ட வாசகமே ஷஹாதா.


அந்த வாசகங்கள் இருப்பதால் சௌதி அரேபியாவின் கொடி தரையில் படுவது அவமதிப்பாகக் கருதப்படுகிறது. இஸ்லாமிய நம்பிக்கையின்படி, இறைவனின் பெயரும் இந்த புனித வாசகமும் கொண்ட ஒரு பொருள் எக்காரணம் கொண்டும் அவமதிக்கப்படக் கூடாது. அதனால்தான், அவர்கள் கொடி உலகக் கோப்பை போட்டியின்போது தரையில் விரிக்கப்படாமல், மேலே உயர்த்திப் பிடிக்கப்படுகின்றன.


சொல்லப்போனால், சௌதி அரேபியா கொடி விஷயத்தில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. அவற்றை மிகவும் தீவிரமாகவும் கடைபிடிக்கிறது. அந்நாட்டு கொடி தரை, புல்வெளி, தண்ணீர் அல்லது அதற்கு அடியில் உள்ள எந்தவொரு பரப்பிலும் படவே கூடாது.


உலகில் எந்தவொரு பெரிய துயரச் சம்பவம் அல்லது நாட்டின் தலைவர்கள் மறைந்தாலும், துக்கம் அனுசரிப்பதற்காகத் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவது உலக வழக்கம். ஆனால், சௌதி அரேபியக் கொடி உலகிலேயே அரைக்கம்பத்தில் இறக்கப்படாத மிகச் சில கொடிகளில் ஒன்று. புனித வாசகம் கொண்ட கொடியைக் கீழே இறக்குவது ஆன்மீக ரீதியாகத் தவறானது என்பதால், எப்போதும் அது உச்சிக் கம்பத்திலேயே பறக்கவிடப்படும்.


அதேபோல், சௌதி கொடியையோ அல்லது அதில் உள்ள வாசகத்தையோ உடைகள், காலணிகள் அல்லது விளம்பரப் பொருட்களில் அச்சிட அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் முழுமையாகத் தடை விதித்துள்ளது. இப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அவர்களின் கொடி மீது விதிக்கப்பட்டிருக்கிறது.


BBC

No comments

Powered by Blogger.