Header Ads



'படுவத்தே சாமர' என்பவன் யார்..?

 
கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்காக இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கி வழங்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த 'படுவத்தே சாமர' என்ற மனோஜ் சுரங்க லியனகே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 


அஜர்பைஜானில் மறைந்திருந்த போது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டார். 


நீண்டகாலமாக டுபாயில் மறைந்திருந்து, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அஜர்பைஜானுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி அந்நாட்டு குடிவரவு சட்டங்களை மீறியமைக்காகவும், தனது காதலி எனக் கூறப்படும் அஜர்பைஜான் நாட்டுப் பெண் ஒருவருடன் தங்கியிருந்த போதும் அவர் கைது செய்யப்பட்டார். 


அந்நாட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை அழைத்து வருவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவர் அடங்கிய விசேட குழுவினர் அஜர்பைஜான் சென்றிருந்தனர். 


ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, டுபாயில் இருக்கும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் கைதாகி வருவதால், அஜர்பைஜான் பாதுகாப்பானது எனக் கருதியே தாம் அங்கு சென்றதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். 


விமானம் புறப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னர், "நான் ஒரு இதய நோயாளி, நெஞ்சு வலிக்கிறது, எனக்கு வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். இவர்கள் என்னைக் கொல்லவே அழைத்துச் செல்கிறார்கள், எனக்கு மருந்துகள் தருவதில்லை" எனக் கூச்சலிட்டு நாடகமாடியதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். 


எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-196 விமானம் மூலம் நேற்று (10) இரவு 10.10 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தற்போது அவர் துறைமுகப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 


கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரிவோல்வர் ரகத் துப்பாக்கியை இஷாரா செவ்வந்திக்கு வழங்கியமை மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ மீதான தாக்குதலை வழிநடத்தியமை ஆகிய குற்றங்களுக்குப் பின்னால் இவரே இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 


இது தவிர, ராகம படுவத்தை பகுதியில் 'ஆமி உபுல்' என்பவரைப் படுகொலை செய்ய வழிநடத்தியமை, கிராண்ட்பாஸ் பகுதியில் 'குடு சுனிதா' மற்றும் அவரது உதவியாளரைக் கொலை செய்யத் திட்டமிட்டமை மற்றும் கம்பஹா, ஜா-எல, பேலியகொட பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலை முன்னெடுத்தமை போன்ற பல பாரிய குற்றச்சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. 


மேலும், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்த இவர், இந்தியாவின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான இப்ராஹிம் தாவூத் கும்பலின் இலங்கைப் பிரதிநிதியாகச் செயற்பட்டிருக்கலாம் எனவும் விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். 


கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிசாந்த டி சொய்சா மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொகுஹெட்டிகே ஆகியோரின் வழிகாட்டலில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.