Header Ads



அரசியல் செல்வாக்குள்ள பிக்குவினால் 14 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - நீதி கிடைக்குமா..?


அனுராதபுரம் அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த பிக்கு ஒருவரால் 14 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (04.05.2026) அனுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


சுமார் 3  ஆண்டுகளுக்கு முன்பு, சிறுமியின் தாயாரே 1 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு அந்தப் பிக்குவிடம் சிறுமியை ஒப்படைத்ததாகச் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்த வழக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.  பிக்குவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டு, வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதது மற்றும் பொலிஸாரின் மெத்தனப் போக்கு குறித்துப் பல தரப்பினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.


பொலிஸார் முறையாக விசாரணை நடத்திச் சந்தேக நபர்களைப் பெயரிடத் தவறினால், வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மாற்றப்படும். அவ்வாறு நிகழும் பட்சத்தில், சட்ட ஆலோசனைகளைப் பெற 4 முதல் 5 ஆண்டுகள் வரை தாமதம் ஏற்பட்டு, குற்றவாளிகள் தப்பிக்கும் சூழல் உருவாகலாம் எனச் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


வழக்கைத் திசைதிருப்பச் சில தரப்புகள் முயன்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

No comments

Powered by Blogger.