இந்தியப் பிரதமரும் அரசாங்கமும் அளித்த மனப்பூர்வமான ஆதரவுக்கு நன்றி
இலங்கை மக்களின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு முயற்சிகளுக்கும், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இந்தியப் பிரதமரும் அரசாங்கமும் அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றியுடன் பாராட்டினார். இந்திய-இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துடன் இந்தியா முன்னெப்போதையும் விட அதிக அர்ப்பணிப்புடன் கைகோர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

Post a Comment