இஸ்லாத்தை ஏற்றால் என்ன..?
- Nasrath S Rosy -
ஆஸ்திரேலிய வரலாற்றாய்வு எழுத்தாளரும் ஃபலஸ்தினிய ஆதரவுப் போராளியுமான ராபர்ட் மார்டின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். அதுபற்றி ஒரு கட்டுரை எழுதித்தாங்க என ஒரு சகோதரி கேட்டிருந்தார்.
பொதுவாக மற்றாரைவிடவும் முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்திற்கு யாரும் வந்துவிட்டால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். அதற்கு காரணம் இன்றல்ல நேற்றல்ல ஒரு முஸ்லிமாக இருப்பது / வாழ்வது மிக மிக கடினம். உலக ஆசைகளில் பலவற்றைத் துறந்து நிறைய கட்டுப்பாடுகளுடன் தான் ஒரு முஸ்லிம் வாழவேண்டும். சும்மா பேருக்கு நான் முஸ்லிமாக இருப்பேன் என்றால் அவர் இஸ்லாத்தை தழுவிக்கொண்டு தான் வரவேண்டும் என்றல்ல, அவர் வேறாகவும் இருந்துவிட்டுப் போகலாம்.
ஐந்து நேரம் தொழுகை, வருடத்தில் ஒரு மாதம் பகல் முழுக்க பட்டினி, வருமானத்தில் ஒரு தொகையை கட்டாயம் தானம் செய்ய வேண்டும் (இது பலருக்கும் பிடிக்காத ஒன்று) மேலும் வட்டி, புகை,மது,பார்ட்டி,குடும்பத்தினரல்லாத ஆண்/பெண் கலந்திருப்பது போன்ற மேற்கத்தியப்பாணி வாழ்க்கை இது எல்லாவற்றையும் தியாகம் செய்து தான் ஒரு முஸ்லிம் இருக்கவேண்டும் என மார்க்கத்தைப் படித்து ஒருவர் இஸ்லாத்தை ஏற்பாரென்றால் நவீன கால வாழ்க்கையில் இவை மிகப்பெரிய சவால் என்பதால் முஸ்லிம் மக்கள் அதனை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர்.
ஆனால் உலகின் பல பிரபலமான மனிதர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் இருவகை உண்டு. ஒன்று வழக்கம்போல அவர் இஸ்லாத்தை ஏற்கும் முன் குர்ஆனை வாசித்து அது போதிக்கும் வாழ்வியலையும் கடவுள் கோட்பாட்டையும் முஸ்லிம்களுடைய கடமைகளையும் புரிந்துகொண்டு அதற்கான பயிற்சியெடுத்து முறையாக ஒரு இமாமிடன் சென்று கலிமா கூறி இஸ்லாத்தை தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்வது. ஏற்ற சில நாட்களிலேயே ஹஜ்,உம்ரா நிறைவேற்றி முழுமையான முஸ்லிமாக தங்களை மாற்றிக்கொள்வது.
இரண்டாவது வகை, உலகில் முஸ்லிம்கள் சுமக்கும் பழிகளையும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களையும் பின்னடைவுகளையும் கண்டு மனவெதும்பி முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இன்று நமது அரசியல்களத்திலும் இன்னபிற பின்புலங்களிலும் எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி உடன்வாழும் முஸ்லிம்களுக்காக ஆதரவுக்கரம் நீட்டவும் களம் காணவும் வருபவர்களைப் போல. உதாரணமாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், இயக்குநர் கரு.பழனியப்பன், நடிகர் பிரகாஷ்ராஜ், திருமுருகன் காந்தி,வழக்கறிஞர் வாஞ்சிநாதன் போன்றவர்கள். இவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்கவேண்டுமென்றல்ல அதைச் செய்யாமலும் நாங்கள் அவர்களுக்காக குரல் கொடுப்போம் என்றிருப்பார்கள்.
ஆனால் மேற்கத்திய நாடுகளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசுவோர், போராட்டக்களம் காண்போர் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாக வெளிப்படையாக அறிவிப்பது "நீங்கள் எதை தீயது என்றும் உலகினை அழிக்க வந்தவர்கள் என்றும் பழி சுமத்தி இழப்புகளை சந்தித்தோர் மீதே மேலும் மேலும் பழிகளை சுமத்தி அவர்களை தலையெடுக்கவிடாமல் செய்வீர்களோ அவர்களோடு தான் நாங்களும் இருப்போம் என்ற கருத்தினை ஆழமாகவும் அழுத்தமாகவும் மண்டையில் குட்டு வைத்ததைப் போல பதிய வைக்கும் படியாக இந்த தீர்மானத்தை கையிலெடுக்கின்றனர். இதற்கு ஆங்கிலத்தில் Ally என்று பெயர். வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்பது போய் நாங்களும் உங்களுடனே இருக்கிறோம் என்பதை உணர்த்தவதற்கான உத்தரவாதமிது.
ராபர்ட் மார்டின் ஒரு வரலாற்றுப்பிரிவு எழுத்தாளர். 2014இல் ஃபலஸ்தினுக்குச் சுற்றுலா சென்றுள்ளார் அங்கு அவர் கண்டுவந்த அவலங்கள், உலகம் இஸ்லாமியர்கள் தலையில் சுமத்தி வைத்திருக்கும் பழிபாவங்கள் அனைத்தையும் உணர்ந்து தன்னையும் ஃபலஸ்தினுக்கு ஆதரவுதரும் போராளியாக மாற்றிக்கொள்கிறார். அதுபற்றிய புத்தகங்களும் செய்தி நாளிதழ்களில் விளக்கக் கட்டுரைகளும் எழுதுகிறார், நீங்கள் யாரை தீவிரவாதி என்பீர்களோ அவர்களுடனே நானும் சேர்ந்துகொள்கிறேன் எனக்கூறி தன்னையும் முஸ்லிமாக அறிவித்துக்கொள்கிறார்.
பலஸ்தினுக்கு உணவும்,மருத்துவப்பொருட்களும் ஏற்றிச்சென்ற நிவாரணக்கப்பலான Flotilla வில் இவரும் இருந்தார். தற்போது சர்வதேச மனித உரிமை ஆணையத்திற்கு தனது அறிக்கையை சமர்பிக்கப்போன இடத்தில் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அங்கே உலக ஊடகத்தின் முன்னிலையில் அறிவித்துள்ளார். மற்றபடி அவர் இஸ்லாம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை ஏற்று அந்த வாழ்வியலை மேற்கொள்வாரா என்பதெல்லாம் இனிமேல் தான் காணவேண்டும். அப்படி அவர் இஸ்லாமிய ஒழுக்கங்களை கடைபிடிக்கவில்லையானாலும் 'அல்லாஹ் எனும் ஒரே இறைவன் மட்டுமே என் இறைவன்' என ஏற்றுக்கொண்டிருந்தால் அவரும் முஸ்லிமாகவே கருதப்படுவார்.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றாலும் அல்லது இஸ்லாமியராக இருந்துவிட்டு பின் அதனைத் துறந்துவிட்டுச் சென்றாலும் அது மார்க்கத்திற்கோ அல்லது அதை பின்பற்றும் மக்களுக்கோ எந்த பெருமையுமில்லை சிறுமையுமில்லை. நாம ஒழுங்கா,விஸ்வாசமா இருக்கமான்னு தான் பார்க்கணும்.
அவர் ஒரு வரலாற்றாசிரியர் என்பதும், இளவயதில் ஆஸ்திரேலியாவிலிருந்து வியட்நாம் போருக்குச் செல்ல மறுத்து, போர்களுக்கு எதிரானவராக அறியப்படுவதற்கு பதில் தேசத்திற்காய் கட்டாய இரணுவப்பணி செய்ய மறுத்த துரோகி என பட்டம் கட்டப்பட்டு சில ஆண்டுகள் சிறையில் கழித்தவர் என்பதும் இப்போது அவருக்கு வயது 76 என்பதும் கூடுதல் தகவல்.
இந்த விபரத்தை ஆடியோ நோட்டாக சகோதரிக்கு அனுப்பிய பிறகு நிச்சயமாக ராபர்ட் மார்டின் இஸ்லாத்தை ஏற்றதாக அறிவித்த சம்பவம் மகிழ்ச்சியளித்திருக்காது என்றே தோன்றியது.

Post a Comment