வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீட்டெடுக்க சர்வதேச உதவி
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் நேற்று (02) பிற்பகல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சில் நடைபெற்றது.
அதற்கமைய, குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் கீழ், ஊழல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் பொலிஸ் பிரிவு, சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் மற்றும் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகிய நிறுவனங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு அலுவலகத்தின் கீழ் உள்ள ஸ்டார் அமைப்பு (StAR initiative) இணக்கம் தெரிவித்துள்ளது.
இச்செயற்பாட்டை முறைப்படி மேற்கொள்வதற்காக செயலணி ஒன்றை நியமிப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஊழல் எதிர்ப்புச் சட்டம், குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் சட்டம் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் சட்டத்தை தயாரிப்பதற்காகவும் அவர்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் திரும்பப் பெறுவதற்கு சர்வதேச ரீதியாகத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ உதவியை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஊழல் எதிர்ப்பு சாசனத்திற்கு அமைவாக உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு அலுவலகத்தின் கீழ் ஸ்டார் (StAR) செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளது.

Post a Comment