தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 4000 kG அத்தியவசிய பொருட்களை நன்கொடை
மேற்படி நிகழ்வின் போது உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், புயலால் பாதிக்கப்பட்ட தமது சகோதர சகோதரிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் மேலான நோக்கில் உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், நாடு எதிர்கொள்கின்ற சகல நெருக்கடியான சூழ்நிலைகளின் போதும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஒன்றுபட்டு தாயக மக்களுக்கு உதவ அர்ப்பணிப்புடன் முன்வருவது சவுதி அரேபிய வாழ் இலங்கை சமூகத்தின் குறிப்பிடத்தக்க பண்பாக இருப்பதாகவும் வலியுறுத்தினார். தொடர்ந்தும் கருத்துரைத்த தூதுவர் அவர்கள், சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகத்தினர் வெளிப்படுத்திய தாராளத் தன்மையையும், ஒற்றுமையையும் வெகுவாக பாராட்டியதுடன், இந்தப் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில் தூதரகம் மேற்கொண்டு வருகின்ற தொடர்ச்சியான முன்னெடுப்புகள் பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தார். மேலும் இதன் போது, நிவாரண பொருட்களை பொதி செய்து இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை எவ்வித கட்டணமும் இன்றி மேற்கொண்டு வருகின்ற ரியாதிலுள்ள ஸேப்லைன் (Safeline) கார்கோ நிறுவனத்தினருக்கும் தூதுவர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தூதரகத்தின் நிவாரண உதவிப் பொருள் சேகரிப்பு நடவடிக்கைகள் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம், ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலை, மற்றும் இராச்சியத்தின் பல பாகங்களிலுமுள்ள ட்ரைக்கோ (Trico) கார்கோ அலுவலகங்கள் என்ற அடிப்படையில் மூன்று சேகரிப்பு மத்திய நிலையங்களை அமைத்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வின் போது தூதரகப் பிரதானி / அமைச்சர் மொஹமட் அனஸ், முதலாம் செயலாளர் விந்தன முனசிங்ஹ, ப்ரடகோல் அதிகாரி ஹமீத் ஆகியோருடன் ஸேப்லைன் (Safeline) கார்கோ நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ரியாத்வாழ் இலங்கைச் சமூகத்தின் பல்வேறு சமூகத் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்

Post a Comment