Header Ads



அடுத்த 2 நாட்களில் கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஜனாதிபதி உத்தரவு


அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு உள்ளான மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 


நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (27)  பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கினார். 


தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஆராயுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, அந்தந்தப் பகுதிகளில் நிலவும் அபாய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை இனங்கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், வீடுகளில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் அனர்த்தம் காரணமாக உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களைத் தொடர்ச்சியாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதுடன், சேதமடைந்த வீடுகள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நட்டஈடு வழங்கும் முறைமை குறித்தும் கவனம் செலுத்தினார்.

No comments

Powered by Blogger.