Header Ads



வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இலங்கை அரசின் தார்மீகக் கடமை – மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ்


வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் - இலங்கை அரசின் தார்மீகக் கடமை என யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். வடக்கு முஸ்லிம் இனச்சுத்திகரிப்பின் 35ஆவது வருட நினைவுகூறலை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.  

 

1990 களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்கள் மீதான பலவந்த வெளியேற்றம் (இனச்சுத்திகரிப்பு) இடம் பெற்று 2025.10.30 ஆம் திகதி இன்றுடன் 35 வருடங்களை நிறைவு செய்திருக்கினறோம். கடந்த 35 வருடங்களாக வடக்கு முஸ்லிம் மக்களின் விவகாரங்கள் போதுமான அளவிற்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவோ அல்லது அவர்களுக்கான போதுமான தீர்வுகள் கிடைத்து விட்டதாகவோ வடக்கு முஸ்லிம்கள் இன்று வரை கருதவில்லை.


தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்றே வடக்கு முஸ்லிம் மக்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றார்கள். இவ் விடயத்தில் உரிய முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு இலங்கை முஸ்லிம் மக்கள் சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியமாகும்.

 

வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் என்பது எத்தனை முஸ்லிம் மக்கள் மீள்குடியேறினார்கள் என்பதிலும், எத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன என்பதிலும் மதிப்பீடு செய்யப்படுகின்ற விடயமாக இருக்க முடியாது. மாறாக அந்த மக்களின் பூர்வீக உரித்து அங்கீகரிக்கப்படுவதிலும், அவர்களது சுயாதீனமான அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்கள் உறுதி செய்யப்படுவதிலும் தங்கியிருக்கின்றது.


வடக்கிலே ஒரு பலமான சமூகமாக “தமிழ் முஸ்லிம்” மக்கள் “வடக்கு மக்கள்” என்ற அடையாளத்தோடு ஐக்கியமாக ஒன்றினைவதற்கான முன்னெடுப்புக்களை இரு தரப்பினரும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.


தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் முஸ்லிம் மக்களை அரவணைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், எமது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளும், அரச நிறுவனங்களும் மென்போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதும் எமது உள்ளார்ந்த எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.


அந்த வகையில் மேற்குறிப்பிட்ட விடயங்களை பின்வரும் தீர்மானங்களாக இங்கு முன்மொழிகின்றேன்.


1. வடக்கு மாகாணம் : இங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களினதும், அவர்களது சந்ததியினரதும் பூர்வீக வாழிடமாகும். அவர்கள் தாம் விரும்பும் காலத்தில் இங்கு மீள்குடியேறுவதற்கான அனைத்து உரித்துக்களையும் உடையவர்கள்.


2. வெளியேற்றப்பட்ட மக்கள் நீதிப் பொறிமுறை ஒன்றைக் கோருவதற்கும், தமக்கான இழப்பீட்டினைக் கோருவதற்கும் முழுமையான உரித்துடையவர்கள்.


3. வடக்கு முஸ்லிம்கள் தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் தம்மோடு ஒன்றாக வாழ்கின்ற தமிழ் மக்களோடும், சிங்கள மக்களோடும் எவ்வித பகைமை உணர்வுமின்றி, ஐக்கியமாகவும், நல்லிணக்கத்தோடும் அனைத்துவிதமான சுயாதீனங்களையும் பேணும் வகையில் வாழ்வதற்கு உரித்துடையவர்களாவர்.


4. வடக்கு முஸ்லிம் மக்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டமையானது “இனச்சுத்திரிப்பு நடவடிக்கை என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கை” என்பதை ஏற்று இதுவரை முழுமைப்படுத்தப்படாமல் இருக்கின்ற எமது மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மீள ஒழுங்கமைத்துத்தரும் வகையில் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யும் வகையிலும், எமது மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமையக் கூடிய “விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவ வேண்டும்” என்றும் வடக்கு முஸ்லிம் மக்கள் நீண்டகாலமா எதிர்பார்த்திருக்கும் விடயமாகும்.


5. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலுள்ள பிரச்சினைகளான காணி, வீடு, உட்கட்டமைப்புக்கள், மீள்குடியேற்ற கொடுப்பனவுகள், வெளியேற்றப்பட்ட போது ஏற்பட்ட சேதங்களுக்கான ந~;டஈடுகள், கல்வி (இரு முஸ்லிம் பாடசாலைகள்), வாழ்வாதாரங்கள் மற்றும் தொழி வாய்ப்புக்கள் போன்ற அனைத்திலுமே குறைபாடுகள் காணப்படுகின்றது. இவற்றை வடக்கில் மீள்குடியேறும் முஸ்லிம் மக்களுக்கு முறையாக பெற்றுக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்படும் புதிய பொறிமுறையான ஜனாதிபதி ஆணைக்குழு உரிய சிபாரிசுகளை அரசிற்கு முன்வைக்க வேண்டும் என்பதுடன், உரிய சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை வடக்கு முஸ்லிம் மக்கள் சார்ந்து எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.


மேற்படி வடக்கு முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பையும், வடக்கு முஸ்லிம் மக்களின் சுபீட்சமான வாழ்வை உறுதி செய்வதற்கும் குறிப்பாக வடக்கு முஸ்லிம் மக்களும், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகளும், இலங்கை அரசும், சர்வதேசமும் முன்வரல் வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என்றுள்ளது.


நெய்னா மொஹமட் அப்துல்லாஹ்  

யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர்

No comments

Powered by Blogger.