Header Ads



Black October – 35” - சொல்லும் செய்தி


Black October – 35 — வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ளன. இலங்கை வரலாற்றில் வடமாகாணத்தின் பூர்வீக சமூகமான ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இடம்பெற்ற அந்த இனச் சுத்திகரிப்பு ஏற்படுத்திய காயமும் அதன் வலியும் இன்றும் ஆறவில்லை.


35 ஆண்டுகள்  கடந்தும், வடமாகாண முஸ்லிம்களின் அவலங்கள் தொடர்கின்றன. வடக்கில் மன்னாரில்  சில இடங்களில் குறிப்பிடத்தக்க மீள்குடியேற்றம் இடம்பெற்றது மகிழ்ச்சியான விடயம் என்றாலும், வடமாகாண முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கு இதுவரை உறுதியான தீர்வோ அல்லது இயல்பான வாழ்வோ கிடைக்கவில்லை. இழந்தவற்றுக்கான இழப்பீடுகளை வழங்க எவரும் முன்வரவில்லை. அரசியல் மற்றும் சிவில் சமூக மட்டங்களில் பல ஆண்டுகளாக முயற்சிகள் இடம்பெற்றிருந்தாலும், அவை வடமாகாண முஸ்லிம்களின் முழுமையான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத் தரவில்லை.


குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்கள் விரும்பும் இடங்களில் வாழ்வதற்கான வசதிகள் மற்றும் இழப்பீடுகள் ஆகியவை இன்று வரை  சாத்தியமாகவில்லை .



கடந்த பல ஆண்டுகளாக Sri Lanka Muslim Youth Forum “கருப்பு ஒக்டோபர்” நிகழ்வுகளை பல அம்சங்களை கருப்பொருளாக கொண்டு அனுஷ்டித்து வந்துள்ளது:  அதன் பின்னணியில் கீழ் காணும் அம்சங்களை வலியுறுத்துகின்றது .


வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைக்காக முன்வைக்கப்படும் தீர்வுயோசனைகள் வெற்றியடைய வேண்டுமானால், அரசு விசேட செயல்திட்டம் ஒன்றின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசாங்கம் வடமாகாணத்துக்கு செலுத்தும் விசேட கவனத்தின் போது வடமாகாண முஸ்லிம்கள் பற்றியும் விசேட கணம்செலுத்தவேண்டும் என வலியுறுத்துகிறது  .


தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு விசேட ஏற்பாடுகளை செய்யமுன்வரவேண்டும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் முஸ்லிம் உறுப்பினர்கள் இது தொடர்பாக விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும்  வலியுறுத்துகிறது . 


இழப்புகளுக்கான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்; மேலும் வடமாகாண முஸ்லிம்கள் வாழ விரும்பும் இடங்களில் சுதந்திரமாகவும் கவுரவத்துடன்  வாழ அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது,


தமிழ்–முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் மீண்டும் புரிந்துணர்வையும் சகவாழ்வையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் மீண்டும் தூண்டும்  சக்திகளை  மக்கள் புறக்கணிக்க வேண்டும்  என்பதையும்  Sri Lanka Muslim Youth Forum வலியுறுத்துகிறது 



 தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு என்றும் மறக்க முடியாத ஒன்று. ஆனால்  புதிய புரிதல்களையும் அணுகுமுறைகளையும் கொண்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் சகவாழ்வை எதிர்கொள்வது காலத்தின் தேவையாகும். ஒக்டோபர்கள் மறக்க முடியாதவை — கருப்பு ஒக்டோபர் 2025 சம உரிமையும் சகவாழ்வையும் வலியுறுத்துகிறது .


*Sri Lanka Muslim Youth Forum*

No comments

Powered by Blogger.