மையில் கலந்த இரத்தம்
மையில் கலந்த இரத்தம் !
********************************
கரும் புகை சூழ்ந்து ,
அலறல்கள் அடங்காத
நொறுங்கித் தகர்ந்து
தரைமட்டமான
கட்டிடங்களுள் புகுந்து
புகைப்படம் எடுத்த
உனது காமெரா
இரத்தத்தில் நனைந்து
சிவந்து விட்டது!
நீதி செத்து விட்ட பூமியில்
மீதியாக எஞ்சியது
சத்தியத்தை சிறைப்பிடித்த
உன் புகைப்படங்களும் ,
ரத்தம் தோய்ந்த
எழுத்துகளை சுமந்த சில
தாள்களும் மட்டுமே!
சந்தடியில்லாமல் ,
சாட்சியாய் எழுந்து நிற்கிற
வல்லமைமிக்கவை அவை !
நிகழ்வுகளை நிழற்படமெடுத்த
கருவிகள் குறி வைக்கப்படுகையில்
உண்மைகளுக்கும் சேர்த்தே
சமாதி கட்டப்படுகிறது.
உனது வீடு தகர்க்கப்பட்டு,
தாய் சிதைக்கப்பட்டு
தந்தை காணாமலாகி,
குழந்தைகளின் சிரிப்பு தொலைந்து .......
என எல்லாமே புதையுண்டு போயினும்
நீ எழுதுவதை நிறுத்தவில்லை !
உனது கால்கள் ஊன்றிய பூமி
அதிர்ந்த போதும்,
நீ அசையாமல்
அசையாப்படமெடுத்துக் கொண்டிருந்தாய்!
ஓடாமல் ,
ஓர்மையோடு நின்று
ஒவ்வொன்றாய்
பதிவுசெய்தாய் !
PRESS என்ற தடித்த ஆங்கில எழுத்துக்களை
உன் மார்பு, தலைக்கவசங்களில்
பொறித்திருந்தமை
அவர்கள் உன்னைக் குறி வைப்பதற்கு
வசதியாய்ப் போனது!
பாதுகாப்பென கருதிச்சுமந்த
அந்த ஐந்து ஆங்கில எழுத்துக்களும்
உனக்கு
பாதுகாப்பைத் தராது போனாலும்,
உனது இறப்பை
தடித்த எழுத்துக்களில்
தலைப்புச் செய்தியாக்கி,
எதிரிகளை தலைகுனிய வைக்கின்றன.
ஏவுகணைகள் நீ எழுதிய தாள்களை விட
பாரமாய் வந்து விழுந்தாலும்,
அவை கிளப்பிய புழுதியை, புகையை
ஊடறுத்து
உன் எழுத்துக்கள் அந்த வான்வெளியில்
வானவில்லாய் பிரகாசிக்கின்றன.
எழுதப்படாத உன் உயில் எரிக்கப்படாமல்,
சிதறிப் போன கட்டிட இடிபாடுகளுள்
கல்வெட்டாய் செதுக்கப்படுகின்றது.
ஊடகப்பணியை உழைப்பாகக் கருதாமல் ,
தொண்டாக உயர்த்தியவர்கள் நீங்கள்!
உங்கள் உயிர்த்தியாகம்
ஊழி உள்ளளவும் வாழும்.
எங்கள் உதடுகள் உச்சரிக்கும்
அனஸ், ஹம்ஸா, சிரீன், வாஈல், சமர், மரியம்……..
என நீளும் பட்டியலை
நாவுகள் உச்சரிக்க,
உள்ளம் கிரகிக்க,
மூளை பதிவிறக்கம் செய்கிறது!
ஒவ்வொரு எழுத்திலும்
அத்தர் வாசம் !
ஒவ்வொரு பெயரிலும்
கஸ்தூரி சுகந்தம்!!
ஒவ்வொரு மரணமும்
விடுதலைக்கான யுத்தப் பேரிகையாய்
ஓங்கி ஒலிக்கிறது!
மடிக்கணிணியின் எழுத்துக்களை
அழுத்துகிற உனது விரல்கள்
அணு ஆயுதப் போருக்கான
பொத்தானை அழுத்தும்
அக்கிரமக்காரர்களின் விரல்களை
மிகைத்த வலிமை மிக்கவை.
வெளிச்சம் மறுக்கப்பட்ட உன் தேசத்தில்,
மாரி காலத்து
இடி முழக்கத்திற்கும்
எதிரிகளின் வெடிச்சத்தத்திற்கும்
வித்தியாசம் தெரியாமல்
முற்றத்தில் விளையாடும் மகள்
பீதியில் அலறினாலும்,
இனி-
உன் அரவணைப்பை,
அதன் கதகதப்பை
உணர மாட்டாள் !
எடுத்த ஒவ்வொரு புகைப்படமும்,
எழுதிய ஒவ்வொரு வசனமும்,
ஸியோனிச வெறியாட்டத்தை
வெளிச்சம் போடுகையில்
உண்மைகளில் இரத்தம் கசியலாம்
ஆனால் -
அவை இறந்து விடுவதில்லை!
பேனா பிடித்த விரல்கள் மரணிப்பதில்லை,
உன் வீர மரணத்தின் பின்னும் எழுத்துகளாய்
உன் விரல்கள் வாழும் !
உன் உடலம்
தேச விடுதலைக்கு
விதையாகிறது,
உன்னில் கசியும் உதிரம்
உரமாகிறது,
இன்ஷா அல்லாஹ், அங்கே
ஒலிவ் மரம் தழைக்கும்.
ரவூப் ஹக்கீம்
22.09.2025

Post a Comment