Header Ads



பொலிஸில் இருந்து வெளியாகும் தகவல்கள்

 

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸாரின் ஊடாகவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 


தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த விடயம் அறியக்கிடைத்துள்ளது. 


இதேவேளை கெஹல்பத்தர பத்மேவைக் கைது செய்வதற்காக சர்வதேச குற்றவியல் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையும் இலங்கை பொலிஸாரின் ஊடாக பத்மேவுக்கு ரகசியமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த மற்றும் இந்தோனேசியாவில் உள்ள பிற குற்றவாளிகளைக் கைது செய்ய ஒரு பெரிய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. 


இரு நாடுகளின் பாதுகாப்புப் படையினரும் இணைந்து அந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர். 


இலங்கையில் இருந்து இந்த நடவடிக்கையில் இணைந்த அதிகாரிகள் இந்தோனேசியாவில் பல நாட்கள் அயராது உழைத்திருந்தனர். 


உதவி பொலிஸ் அத்தியட்சகரான ஒலுகல கடந்த சில நாட்களாகவே தென்படவில்லை என தருண் என்ற குற்றவாளிக்கு பொலிஸாரின் ஊடாக ரகசியமாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. 


இதனையடுத்து அவரது தொலைபேசி இலக்கத்தின் ஐ.பி எண்ணை வைத்து தருண் ஆராய்ந்ததாகவும், அதன் மூலம் ஒலுகல இந்தோனேசியாவில் இருப்பது அறிந்து அந்த தகவல் பத்மேவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 


அதன்படி, இது குறித்து தகவல் கிடைத்த கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் குடு நிலங்க ஆகியோர் அதுவரை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதேவேளை கெஹல்பத்தர பத்மேவை கைது செய்ய சர்வதேச பொலிஸார் மூலம் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையின் படம் கெஹல்பத்தர பத்மேவின் கைப்பேசியில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


பொலிஸ்துறையில் உள்ள சில ஊழல் அதிகாரிகள் கெஹல்பத்தர பத்மேவின் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும், இந்த வழியில் அவர்களுக்கு தகவல்களை வழங்கி வருவதாகவும் பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments

Powered by Blogger.