Header Ads



நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரியை நெருக்கமாக்க, உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் - ஜனாதிபதி


உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களால் மிகவும் மரியாதையுடன் கொண்டாடப்படும்  முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தினமான, மீலாதுன் நபி தினம் இன்றாகும். 


இறுதி நபியான முஹம்மது நபி அவர்கள், சன்மார்க்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தம்மை அர்ப்பணித்து, அதற்காகப் பெரும் பணியை ஆற்றியவர். இஸ்லாமிய ஒழுக்க நெறியை நிறுவுவதில் முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். அக்கால சமூகத்திற்கு இஸ்லாத்தின் செய்தியை முன்வைப்பதில் நபிகள் நாயகம் கடுமையான துன்பங்களை அனுபவித்தார். அத்தகைய தருணங்களிலும் கூட, அவர் பொறுமையையும் மௌனத்தையும் கடைபிடித்தார்.


பிளவுபட்ட அரபு சமூகத்திற்குப் பதிலாக,இஸ்லாத்தின் அடிப்படையையும் அர்த்தத்தையும் சுமக்கின்ற,சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் கொண்டு உன்னத விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க, 23 வருடங்களாக, முஹம்மத் நபி அவர்கள் தனது பிரசங்கம், செயற்பாடுகள், தியாகம் மற்றும் வாழ்க்கை முன்மாதிரி மூலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இனம், சாதி, நிறம் என்ற வகையில் எந்தவொரு நபரும் மற்றொருவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்ற  சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மகத்துவமான கருத்தே அவரது போதனைகளின் அடித்தளமாகும்.


சமூகத்தில் நிலவும் இடைவெளிகளை நீக்கி, மக்களின் இதயங்களில் சமத்துவத்தை விதைப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கிய நபியவர்களின் முன்மாதிரி, இன்று நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களை முறியடித்து, சமத்துவம், சட்டத்தை மதித்தல் மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ஒளிவிளக்காக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.


சகல விதத்திலும்  வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்திற்கு மனிதாபிமானத்தையும் அன்பையும் வழங்கி புதிய நெறிமுறையின் அடிப்படையில் நாட்டை மேம்படுத்தும் எமது முயற்சியில், எம்முடன் இணைந்துள்ள நீங்களும் நபிகளாரின் உண்மையான வாழ்க்கை முன்மாதிரியை வாழ்க்கைக்கு நெருக்கமாக எடுத்து, இந்த மீலாதுன் நபி தினத்தை மென்மேலும் அர்த்தமுள்ளதாக்க  உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.


இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிகரமான  மீலாதுன் நபி தின வாழ்த்துகள்!


அநுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2025 செப்டெம்பர் 05 ஆம் திகதி

www.jaffnamuslim.com

No comments

Powered by Blogger.