Header Ads



"உலகத்திற்கே வழிகாட்டிய, அன்றைய முஸ்லிம் (அந்தலூசியா) ஸ்பெயின்"


நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பா மருத்துவத்துறையில் பின்தங்கியிருந்த காலத்தில், அந்தலூசியாவின்(ஸ்பெயின்) இஸ்லாமிய உலகம் அறிவுக்கும். முன்னேற்றத்திற்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது.


 பாரிஸிலிருந்து சிகிச்சைக்காக ஸ்பெயினுக்கு வந்த ஒரு இளம் பிரெஞ்சு பயணி, தனது தந்தைக்கு எழுதிய கடிதம் அக்காலத்தின் அற்புதமான மருத்துவ சேவைகளைத் தெளிவாக‌ எடுத்தியம்புகிறது.


இந்தக் கடிதத்தை, வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பயணக் கட்டுரை போலப் படிக்கலாம்.


அன்புள்ள தந்தையே,


என் சிகிச்சைக்காக பணம் அனுப்புவதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், இந்த மருத்துவமனையில் பணத்திற்கு எந்தத் தேவையும் இல்லை.


 ஏனெனில், இங்கு சிகிச்சை முற்றிலும் இலவசம்.


நம்ப முடியாத மற்றொரு விசயத்தையும் நான் சொல்கிறேன்:


 குணமடைந்து மருத்துவமனையை விட்டுச் செல்பவர்களுக்கு, அவர்கள் ஓய்வு நேரத்தில் சிரமப்படாமல் இருக்க, பரிசாக 5 தினார் வழங்கப்படுகிறது! அதனுடன் புதிய ஆடைகளும் அளிக்கப்படுகின்றன.


நீங்கள் என்னைப் பார்க்க வந்தால், அறுவை சிகிச்சை பிரிவில் என்னைக் காணலாம். 


என் அறைக்கு அருகில் ஒரு பெரிய நூலகமும், விரிவுரை மண்டபமும் உள்ளன. அங்கு மருத்துவர்கள் தினமும் மூத்த மருத்துவர்களின் விரிவுரைகளைக் கேட்க ஒன்று கூடுகிறார்கள்.


பெண்களுக்கான பிரிவு இந்த மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் உள்ளது, அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை.


 குணமடைந்தவர்கள் ஓய்வெடுப்பதற்கென தனி நூலகத்துடன் கூடிய ஒரு பெரிய ஓய்வு அறையும் இங்கு உள்ளது.


மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதியும் மிக சுத்தமாக உள்ளது. படுக்கைகளும் தலையணைகளும் நல்ல டமாஸ்கஸ் பட்டுத் துணியால் செய்யப்பட்ட வெள்ளை உறைகளால் மூடப்பட்டுள்ளன. போர்வைகள் மென்மையான வெல்வெட் துணியால் ஆனவை.


அனைத்து அறைகளுக்கும் குழாய்கள் வழியாக சுத்தமான நீர் வழங்கப்படுகிறது. மேலும், குளிர்காலத்தில் மருத்துவர்களின் ஒவ்வொரு அறைக்கும் வெந்நீர் வழங்கும் வசதிகளும் உள்ளன.


இங்கு உணவு கோழி இறைச்சியும் காய்கறிகளும் கொண்டதாக உள்ளது. அது மிகவும் சுவையானதால், சில நோயாளிகளுக்கு மருத்துவமனையை விட்டுச் செல்லவே விருப்பம் இல்லை!


ஆதாரம்: அமீர் ஜஃபர் அர்ஷதியின் “அல்-தஃபவ்வுகுல்-இல்மி ஃபில்-இஸ்லாம்” (இஸ்லாத்தில் அறிவியலின் சிறப்பு) என்ற புத்தகம்.

Dr Hafeed Nadwi

No comments

Powered by Blogger.