Header Ads



புத்தியுடன் இதயத்தையும் விருத்திசெய்யும் பிள்ளைகளை உருவாக்கக் கவனம் செலுத்துங்கள் - பிரதமருக்கு வேண்டுகோள்


புத்தியை மட்டும் விருத்தி செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக, இதயத்தையும் விருத்தி செய்து, கருணையுடன் கூடிய போதிசத்துவ குணங்கள் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்குப் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துமாறு அஸ்கிரி, மல்வத்து ஆகிய இரு மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கேட்டுக்கொண்டனர்.


புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் அனுநாயக்க தேரர்கள் மற்றும் காரக சங்க சபையின் துறவிகளுக்கு தெளிவூட்டுவதற்காக, கண்டியில் உள்ள தலதா மாளிகை வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியாவின் பங்கேற்புடன் இன்று (31) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அனுநாயக்க தேரர்கள் இதனைத் தெரிவித்தனர்.


புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்துச் சமூகத்தில் எழுந்துள்ள தவறான கருத்துக்கள், அதன் தற்போதைய நிலை மற்றும் அதன் உண்மையான தன்மை குறித்து பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவ அவர்களால் அஸ்கிரி, மல்வத்து இரு பீடங்களின் துறவிகளுக்கு இங்கு விளக்கமளிக்கப்பட்டது.


இங்கு அறிவுரை வழங்கிய அஸ்கிரி, மல்வத்து இரு பீடங்களின் அநுநாயக்க தேரர்கள், புதிய கல்விச் சீர்திருத்தத்தில் நன்னெறிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், குழந்தைகளின் தொழில்சார் திறன்களையும் மனிதாபிமானப் பண்புகளையும் ஒருங்கே வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.


புதிய கல்விச் சீர்திருத்தத்துடன் இணைந்ததாக பிரிவெனாக் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.


இந்நிகழ்வில், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வெண்டருவே ஸ்ரீ உபாலி நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்ம நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் மற்றுமொரு அநுநாயக்க தேரர் கலாநிதி வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிரி நாயக்க தேரர், பிரதான காரக சங்க சபையின் துறவிகள், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


பிரதமர் ஊடகப் பிரிவு

01.08.2025

No comments

Powered by Blogger.