முஹம்மது சலாமா சுவனத்தில் மணமகள் ஹலா உஸ்பூருக்காக இன்ஷா அல்லாஹ் காத்திருப்பார்...
கான் யூனிஸில் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞராக இருந்த முஹம்மது, போர் நிறுத்தம் குறித்த செய்திகள் வந்துகொண்டிருப்பதால் இனப்படுகொலைக்கு ஒரு முடிவு வந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இனப்படுகொலையின் நேரடி காட்சிகளை ஆவணப்படுத்த முஹம்மது தீவிரமாக களமாடும் சூழலின் காரணமாகவே அவர்கள் திருமணத்தை ஒத்தி வைத்தனரே தவிர இந்த கடினமான சூழலிலும், வாழ்க்கைக்கான கடமைகளை காஸா மக்கள் ஒத்திவைப்பதில்லை.
பட்டினியும், இனப்படுகொலையும் அன்றாட நிகழ்வாகிவிட்ட காஸாவில், முஹம்மது தனது வருங்கால மனைவிக்கு விலைமதிப்பற்ற பரிசான ஒரு பாக்கெட் குபூஸ் (ரொட்டி) கொடுத்தார். இன்று காஸாவில் தங்கத்தை விடவும் அதிக மதிப்புள்ள அந்தப் பரிசை அவர் எப்படியோ சிரமப்பட்டு ஏற்பாடு செய்திருந்தார்.
எப்படியும் வாழ்வோம் என்ற அவர்களின் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டு அல்லாஹ் ஒரு முடிவை அவர்களுக்கு அளித்திருந்தான். பத்திரிகையாளர்களை தேடிப்பிடித்து கொல்லும் ஆக்கிரமிப்பு படையின் குண்டு வீசும் டிரோன், நேற்று (திங்கட்கிழமை) முஹம்மதுவையும் அவருடன் இருந்த 4 பத்திரிகையாளர்களையும் (ஹுசாம், முஆத், மர்யம்) ஷஹீதாக்கி (தியாகியாக்கி) விட்டது.
போரின் ஆரம்பம் முதல் 24 மணி நேரமும் தங்கியிருந்த, குண்டு வீசும் தருணங்களில் கூட விலகிச் செல்லாத நாசர் மருத்துவ வளாகத்தில் ஷஹாதத் (தியாகம்) அடைந்த முஹம்மது, சுவனத்தில் மணமகள் ஹலா உஸ்பூருக்காக இன்ஷா அல்லாஹ் காத்திருப்பார்.
முஹம்மது - ஹலா நிச்சயதார்த்தத்தைப் பற்றி எழுதும்போது, சமூக ஊடகங்களில் கண்முன் தேவையில்லாமல் கடந்து செல்லும் நமது சமூகத்தின் கேலிக்கூத்தான திருமண ரீல்களின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.
போர்க்காலத்தில், எந்த நேரத்திலும் உயிரை இழக்க நேரிடும் என்றாலும், திருமணத்தையும் குடும்பத்தையும் வாழ்க்கையின் பொறுப்பாக பார்க்கும் காஸாவில் இருப்பவர்கள் உம்மத்து தான். (முஸ்லிம் சமுதாயம்). வெறும் ஆடம்பரங்களையும் போலியான கொண்டாட்டங்களையும் கொண்ட திருமண கொண்டாட்ட நிகழ்வுகளை போட்டி போட்டுக்கொண்டு நடத்தும் நாமும் உம்மத்து தான்!
முஹம்மதுவுடன் ஷஹாதத் அடைந்த மர்யம் அபூதகா ஒரு நாள் முன்பு இப்படி எழுதியிருந்தார்: "உன்னிடம் இருக்கும் மிகவும் மதிப்புமிக்க பொருள் மண்ணால் மூடப்படும்போது, இந்த உலக வாழ்க்கை எவ்வளவு அற்பமானது என்பதை நீ அறிவாய்."
படம்: ஷஹீத் முஹம்மது சலாமா மற்றும் அவரது வருங்கால மனைவி ஹலா உஸ்பூர் ஆகியோர் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தில் பணியில் இருந்தபோது.
DrCK Abdulla

Post a Comment