Header Ads



நீர்கொழும்பு மாநகர முதல்வரின் அறிவிப்பு


- இஸ்மதுல் றஹுமான் -


நாம் மாநகர சபையை பொறுப்பேற்ற பின்னர் எந்தவொரு சட்டவிரோத கட்டிடத்திற்கும் அனுமதி வழங்கவில்லை. முன்னைய ஆட்சியாளர் சட்டவிரோத கட்டுமாணங்களுக்கு வழங்கிய அனுமதிக்கு மாற்றுத் திட்டங்கள் வழங்காமல் எமக்கு உடனடியாக நீக்க முடியாது என நீர்கொழும்பு மாநகர முதல்வர் சட்டதரணி ரொபட் ஹீன்கெந்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார். 


அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,


நகரில் சட்ட விரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றன. இவை நாம் அனுமதி வழங்கியவை அல்ல. அதனை உடனடியாக அகற்றும் போது மேலும் பிரச்சினைகள் எழுகின்றன.


இது பல வருட காலங்களாக நீடித்து வருவதாகும். இதற்கான மாற்றுத் திட்டங்களை வகுத்துக் கொண்டே செயல்பட வேண்டியுள்ளது.


இது மனிதாபிமான பிரச்சினை என்பதால் அவர்களுடனும் பேசி சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடனும் பேசி தீர்வு கண்டு நீர்கொழும்பு நகரை அழகான நகரமாக மாற்றுவோம். இதற்குப் பின்னர் இவ்வாறான கட்டடங்களுக்கு அனுமதி வழங்கமாட்டோம்.


மக்கள் நினைக்கிறார்கள் நாம் வாக்களித்தோம். இப்போது செயல்பட வேண்டும் என்று. வாக்களிப்பதன் மூலம் அரசியல் மாற்றம் மட்டுமே நிகழ்கின்றது. அரச அதிகாரிகளுக்கும் பிரஜைகள் என்ற முறையில் பொது மக்களுக்கும் பொறுப்புக்கள் உள்ளன அவர்களிடமும் மாற்றம் வேண்டும்.


சட்ட விரோத கட்டடங்களை நிர்மானிக்கும் போது மழை நீர் வழிந்தோட முடியாமல் தடைபட்டு வெள்ளம் ஏற்படுகின்றன. அதனால் கஷ்டப்படுவது யார்?, சுற்றாடல் மாசடையும் போது எமது பிரதேசத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மட்டுப்படுகின்றது. இதனால் யாருடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது?.


தற்போது வழங்கப்பட்டுள்ள குறித்த டென்டர்களின் காலம் முடி வடைந்ததும் புதிதாக டென்டர் கோறும் போது உரிய முறைகள் பின்பற்றப்படும்.


இதேபோல்தான் கடற்கரையில் கருவாடு காய்ப்பதனால் சூழல் மாசடைவதுடன் உல்லாசப் பயணிகளின் வருகைக்கும் அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டுகிறார்கள்.


அதில் உண்மை இருக்கின்றது. கருவாடு காய்ப்பதற்காக வெற்றுக் காணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கான இடங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.


கப்பம் கோருதல், ஊழல் மோசடி தொடர்பாக முறைப்பாடு செய்யுமாறு கூறினாலும் யாரும் முறையிட முன்வருவதில்லை. இடத்துக்கிடம் பேசுவதில் பயனில்லை. முறையிட்டால் சட்டத்தை செய்வோம். எம்மிடம் டீல் இல்லை.


பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைக்கு சீல் வைத்து வாடகையை பெற்றுக்கொண்டோம்.


மாநகர சபையின் வளங்கள் சொத்துக்கள் தொடர்பாக எந்தப் பதிவுமில்லை. அவற்றை அடையாளம்கான அதிகாரிகளை நியமித்து அடையாளம்கான ஆரம்பித்துள்ளோம்.


சுற்றாடலை அழகு படுத்துவதற்காக கண்டகண்ட இடங்களில் விளம்பரங்களை பொறுத்துவதற்குப் பதிலாக வீதியில் இரு பக்கமும் குறிப்பிட்ட தூரத்தில் பாரிய விளம்பர பலகைகளை பொறுத்தி விளம்பரங்களை ஒட்டுவதற்கு வழிசெய்வோம் என்றார்.

No comments

Powered by Blogger.