இலங்கை பாதுகாப்புப் படை, உலகில் தலைசிறந்த பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் - ஜனாதிபதி
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டுப் பயிற்சி குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த பயிற்சி ஏனைய அரச துறைகளிலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியை விட தனித்துவமானது என்பதால் அது குறித்து அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அரசாங்கம் ஏற்கனவே பெருமளவு நிதியை செலவிட்டு வரும் நிலையில் , அதனால் வழங்கப்படும் சேவைகள் பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனுள்ளதாகவும் திறம்படவும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

Post a Comment