Header Ads



நீர்கொழும்பு கத்தோலிக்க சபை அதிர்ச்சி


- இஸ்மதுல் றஹுமான் -


        நீர்கொழும்பில் இருந்து மடு தேவஸ்தானத்திற்கு பயணிப்பதற்கான விசேட புகையிர சேவைக்கு இம்முறை 26 இலட்சம் ரூபா பணத்தை புகையிரத திணைக்களம் கோரியுள்ளது.


       ஆகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறும் மருதமடு வருடாந்த திருவிழாவுக்கு நீர்கொழும்பு பிரதேச கத்தோலிக்க பக்தர்கள் செல்வதற்கு வசதியாக 2002ஆம் ஆண்டு முதல் விசேட புகையிரத சேவை இடம்பெறுகின்றன.


      இம் முறை மடு தேவஸ்தானத்தை நோக்கி விசேட புகையிரத சேவையை ஏற்பாடு செய்ய 25 இலட்சம் ரூபா செலுத்த வேண்டும் எனவும்  வைப்புப் பணமாக மேலும் ஒரு இலட்சம் ரூபா தேவை எனவும் புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் (வானிபம்) டப்லிவ். டீ. ரன்ஜித் பத்மலால் நீர்கொழும்பு பிராந்திய கத்தோலிக்க சபை செயலாளருக்கு  அறிவித்துள்ளார்.


      நீர்கொழும்பு பிராந்திய கத்தோலிக்க சபை செயலாளர் எம்மானுவெல் பியும்வர்தன இது தொடர்பாக கூறுகையில் 2009 ஆண்டு முதல் மடு திரு விழா காலங்களில்  கலந்துகொள்ளச் செல்லும் கத்தோலிக்க மக்களுக்காக ஏற்பாடு செய்துதரப்பட்ட விசேட புகையிரத சேவைக்கு புகையிரத திணைக்களத்தினாலோ அரசாங்கத்தாலோ இவ்வளவு பாரிய தொகை பணம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்ததில்லை.


      பயணிக்கும் பக்தர்கள் பயணத்திற்குறிய டிக்கட் பணத்தை புகையிரத நிலையங்களில் செலுத்தி டிக்கட்டுகளை வாங்கியே பயணம் செய்தனர்.  இம்முறை 26 இலட்சம் ரூபா கோரியது எம்மை வியப்படையச் செய்துள்ளது.


     இது தொடர்பாக நாம் ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் நியாயத்தை பெற்றுத்தருவார் என எதிர் பார்க்கிறோம்.


     செயலாளர் பியும்வர்தன மேலும் தெரிவிக்கையில் நீர்கொழும்பு புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் இவ் விசேட புகையிரத்தில் நீர்கொழும்பு, கட்டான, வென்னப்புவ, குரண, சீதுவ, ஜாஎல, கந்தான பிரதேசங்களைச் சேர்ந்த கத்தோலிக்க பக்தர்கள் பயணம் செய்கின்றனர்.


      அதே போல் இப் புகையிரதம் ராகம,  வெயங்கொடை, மீரிகம புகையிரத நிலையங்களில் நிறுத்தப்படுவதனால் அங்குள்ள பக்தர்களும் இதில் பயணிக்கின்றனர்.


     புகையிரத ஆசனங்களை விட இரட்டிப்பான தொகையினர் இதில் பயணிப்பது வழமையாகும் என்றார்.


    மேலும் கத்தோலிக்க பக்தர்களுக்கு மட்டும் இவ்வாறு புகையிரத சேவைகள் ஏற்பாடு செய்யப்படுவதில்லை. அநுராதபுரம், மிஹிந்தலை, கண்டி, ஹட்டன் ஆகிய இடங்களுக்கும் விசேட நிகழ்வுகளின் போது விசேட புகையிரத சேவைகள் இடம்பெறுவதுண்டு.


      எனவே தேவையற்ற பிரிவினைகளை உருவாக்காமல் வலமைபோல் புகையிரத சேவை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.