Header Ads



முத்து நகர் விவசாயிகள், மாவட்ட செயலகம் முன் காணி மீட்பு போராட்டம்


திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாயிகள் தங்களது அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டு விவசாய செய்கை பண்ணக் கூடிய வாய்ப்புக்களை வழங்குமாறு திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இன்று (29)கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.


இலங்கை துறைமுக அதிகாரசபையின் சூரிய மின் சக்தி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபகரித்த காணியை மீட்க கோரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்ற நிலையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


முத்து நகர் பகுதியில், சூரிய மின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் நோக்கில், பொதுமக்களின் விவசாய நிலங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட கால குத்தகைக்கு தனியார் கம்பனிகளுக்கு இது வழங்கப்பட்டு தற்போது வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

அப்பகுதியில் வேலியிடப்பட்ட நிலங்கள், பல ஆண்டுகளாக விவசாயக் களமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், முந்தைய ஆலோசனைகள், உரிய தகவலளிப்பு மற்றும் மக்கள் ஒப்புதல் இல்லாமல், அரசாங்கம் முன்வைக்கும் இந்த நடவடிக்கையை மக்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.


விவசாய நிலங்களை பாதுகாக்கவேண்டும், மக்கள் உடமையை அபகரிக்காதீர்கள், சுற்றுச்சூழல் விரோத திட்டங்களை நிறுத்துங்கள் எனும் கோஷங்களை எழுப்பியதோடு, தங்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் திட்டங்களை இடைநிறுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.

போராட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து குரல் எழுப்பினர்.


போராட்டத்தின்போது மாவட்ட செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கோரப்பட்டதுடன், அக்கான தீர்வு எட்டப்படாவிடின் எதிர்வரும் நாட்களில் பரபரப்பான மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரப்படலாம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


350 க்கு மேற்பட்ட விவசாய குடும்பங்கள்  இங்கு வாழ்வதாகவும் . இங்கு மூன்று விவசாய சம்மேளனங்களான  முத்து நகர்,தகரவெட்டுவான் மற்றும் மத்திய வெளி ஆகிய சங்கங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சுமார் 
53 வருடங்களாக விவசாய செய்கை மேற்கொள்கின்ற நிலையில் தற்போது அபகரித்த காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கின்றனர்

No comments

Powered by Blogger.