Header Ads



மரண தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டது எப்படி..?


சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், ஒருவரை பொல்லால் தாக்கி படுகொலைச்செய்த குற்றச்சாட்டில், நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி, கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம், பதுளையில் இடம்பெற்றுள்ளது.


தனது கணவன் தன்னை அடித்தார் என அவரது மனைவி செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே, இந்த நபர் மரண தண்டனை ​விதிக்கப்பட்ட கைதி ​என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


தான் தலைமறைவாகியிருந்த காலத்திலேயே திருமணம் முடித்துள்ளார்.


இது தொடர்பாக தெரியவருவதாவது,


பதுளை மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர்  10 ஆண்டுகளாக நீதிமன்றத்தை விட்டு,தலைமறைவாக இருந்த நிலையில் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பதுளை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதவான் மஹிந்த லியனகமவின் உத்தரவின் பேரில் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேக நபர்  ஹாலி எல, புனித ஜேம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.  


பதுளை பகுதியில் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கு விசாரிக்கப்படும் போது குறித்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதால், குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாமல் வழக்கு விசாரிக்கப்பட்டது.


வழங்கப்பட்ட ஆதாரங்களின்படி வழக்கு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறிய அப்போதைய மேல் நீதிமன்ற நீதவான், 2015-04-27 அன்று வழக்கில் தீர்ப்பை அறிவித்து அவருக்கு மரண தண்டனை விதித்தார்.


ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததால் நீதிமன்றம் அவருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.


இருப்பினும், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 28 ஆம் திகதி, சந்தேக நபர் தனது மனைவியைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக மொனராகலை புத்தம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபருக்கு ​​ஏற்கனவே பதுளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.


சந்தேக நபர் மேல் நீதிமன்றத்தைத் தவிர்த்து புத்தம மாவட்டத்தில் குடியேறி, அப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து , கூலி வேலை செய்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 


பதுளை மேல் நீதிமன்றத்தில் சந்தேக நபர் இல்லாமல் கொலை வழக்கு விசாரிக்கப்பட்டதால், வழக்கை மீண்டும் விசாரிக்க மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. இல்லையெனில் 15 ஆம் திகதி மீண்டும் மரண தண்டனை விதிக்கப்படும் என தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.