Header Ads



செம்மணி புதைகுழியில் புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கூட இருக்கக்கூடும்


யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மீளத் தோண்டுவதன் மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன,  புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கூட அங்கு இருக்கக்கூடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.


செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தற்போது மீண்டும் பேசப்படுகின்றது. இந்த விகாரம் மீளத் தோண்டப்படுவதன் நோக்கம்தான் என்ன? இந்த நாட்டில் போர் நிலவியது. பயங்கரவாதம் இருந்தது. மக்கள் கொல்லப்பட்டனர்.


படையினர் கொல்லப்பட்டனர். அழிவுகள் ஏற்பட்டன. கடைசியில் படையினர்தான் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்தினர். செம்மணி மனிதப் புதைகுழியில் இருப்பவை யாருடைய சடலங்கள்? பூநகரி மற்றும் ஆனையிறவு மோதலின்போது படையினர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.


சில உடல்களே கிடைக்கப் பெற்றன. எனவே, செம்மணியில் மீட்கப்படும் மனிதச் சிதிலங்கள் இராணுவத்தினருடையவை என எம்மால் கூறமுடியும். செம்மணிப் புதைகுழியை எதற்காக மீண்டும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.


இந்த விடயத்தைத் தோண்டத் தோண்ட அது யாசகனின் காயங்கள்போல் மாறிவிடும். எனவே, அரசும், தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.