யுத்த நிறுத்தம் மீறப்படுமாயின் முன்பைவிட பலமான பதிலடி - இலங்கைக்கான ஈரானியத் தூதுவர்
யுத்த நிறுத்தம் மீறப்படுமாயின் முன்பை விடவும் பலமானதாக ஈரானின் பதிலடி அமையும் என்று இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் கலாநிதி அலிரெஷா டெல்கொஷ் தெரிவித்தார்.
ஈரான்- இஸ்ரேல் யுத்தம், அதனைத் தொடர்ந்த யுத்த நிறுத்தம் என்பன தொடர்பில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈரான் யுத்தத்தை விரும்பும் நாடு அல்ல என்பதோடு, எந்தவொரு நாட்டையும் ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்ட நாடுமல்ல. ஆனால் இஸ்ரேல் எமது இறைமையை மீறி தாக்குதல் நடத்தியதற்கே தற்காப்பு பதில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில்,
எமது அணுசக்தி தொடர்பில் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயமே இஸ்ரேல் எம்மீது தாக்குதல்களை ஆரம்பித்தது. 13 ஆம் திகதி முதல் 12 நாட்கள் நீடித்த இப்போரில் இஸ்ரேல் ஈரானின் 20 நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. இராணுவ கட்டமைப்புகள், ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள், அணுசக்தி நிலையங்கள் மாத்திரமல்லாமல் மக்கள் குடியிருப்புக்கள் மீது கூட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொலைக்காட்சி நிலையத்தின் மீது கூட தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களினால் ஈரானில் 672 பேர் கொல்லப்பட்டதோடு சுமார் 5000 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிப் பொதுமக்களாவர்.
Post a Comment