இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரின் அறிவிப்பு
இஸ்ரேலுக்கு சொந்தமான பல விமான நிறுவனங்கள் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வரையறுக்கப்பட்ட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளதாக தூதரகத்தின் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
தற்போதைய சாதகமான நிலைமையை கருத்தில் கொண்டு, பெரும்பாலும் இன்று (25) சர்வதேச விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் போர் நிறுத்தத்தை பேணுவதற்கு இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
நேற்று (24) ஒரே நாளில் மூன்று இலங்கையர்கள் இஸ்ரேலில் இருந்து எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் வழியாக கொழும்புக்கு வந்தடைந்ததாக தூதரகம் தெரிவித்தது.
தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் பயணிகள் மீண்டும் இஸ்ரேலுக்கு வருவதற்கு தங்கள் விமான டிக்கெட்டுகள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் விசாரிக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏராளமான பயணிகள் ஒரே நேரத்தில் வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதால், விமான டிக்கெட்டுகள் பெறுவதில் சற்று நெரிசல் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல் அவிவ் செல்லும் விமான சேவைகள் அல்லது இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் நிலைமை குறித்த மேலதிக விபரங்களுக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதுவர் நிமல் பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment