ஹமாஸ் இஸ்ரேலைத் தோற்கடித்து விட்டது - இஸ்ரேலின் முன்னாள் ஜெனரல்
காஸாவில் ஹமாஸ் இஸ்ரேலைத் தோற்கடித்துவிட்டதாகவும், தற்போது நாடு "கூட்டுத் தற்கொலை"யின் விளிம்பில் இருப்பதாகவும் பிரிக் தெரிவித்தார்.
சியோனிச இஸ்ரேலிய நாளிதழான மாரிவ்-வில் ஞாயிற்றுக்கிழமை வெளியான ஒரு திறந்த கட்டுரையில், IDF படைவீரர்களின் குறை தீர்க்கும் அதிகாரியாகப் (ஓம்ப்யூட்ஸ்மேனாக) பணியாற்றிய பிரிக், சியோனிச இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தோல்வியடைந்துவிட்டதாகவும், எதிர்காலப் போர்களுக்கு அது தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சியோனிச இஸ்ரேலின் ராணுவக் கோட்பாட்டை நீண்டகாலமாக விமர்சித்து வரும் பிரிக், சியோனிச இஸ்ரேலிய அரசாங்கம் நாட்டை ஒரு பேரழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது என்று குற்றம் சாட்டினார். "இத்தகைய அரசியல் மற்றும் ராணுவ மட்டத்தில், வெளிநாட்டு எதிரிகள் தேவையில்லை; அவர்களது அறியாமையே நமக்கு பேரழிவை ஏற்படுத்தும். விரைவில் நாம் மீள முடியாத ஒரு நிலையை அடையலாம். நாம் செய்யக்கூடிய ஒரே காரியம், நம் கடவுளிடம் நமக்கு உதவப் பிரார்த்திப்பதுதான். அப்போது நாம் அனைவரும் அற்புதங்களுக்காகப் பிரார்த்திக்கும் மெசியாக்களாக இருப்போம்" என்று பிரிக் கூறுகிறார்.
காஸாவுக்கு எதிரான போர் இருபதாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், போரின் முன்னேற்றம் குறித்த சியோனிச இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ கூற்றுக்களை பிரிக் நிராகரித்தார். ஆப்ரேஷன் கிடியோன்ஸ் சாரியட்ஸ்(கிதியோனின் தேர்கள்) என்று பெயரிடப்பட்ட சமீபத்திய இராணுவ நடவடிக்கை குறித்து பிரிக் இவ்வாறு எழுதுகிறார்:
"போர் முழுவதும், அரசியல் மற்றும் இராணுவ மட்டங்கள் பொதுமக்களிடம் பொய் சொன்னது போலவே, ஹமாஸ் சரணடைய இன்னும் சில நாட்களே உள்ளன என்று மீண்டும் மீண்டும் அறிவித்தன. அரசியல் மற்றும் இராணுவ மட்டங்களின் அதே பொய்கள் இன்னும் தொடர்கின்றன. நம்முடைய ராணுவ வீரர்கள் கொல்லப்படாமலோ அல்லது காயமடையாமலோ ஒரு நாள் கூட கடப்பதில்லை. பொறுப்பற்ற இந்த குழுவும் அவர்களது சகாக்களும் இஸ்ரேலிய மக்களை எவ்வளவு பயங்கரமான பேரழிவுக்குத் தள்ளிவிடுகிறார்கள் என்பதை விரைவில் நாம் உணர்வோம்."
"மத்திய கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்ட ஒரு படையை ஹமாஸ் தோற்கடித்தது. இது எதிரிகளுக்கு எதிரான இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஒரு பலத்த அடியாக அமைந்தது. இது நமது எல்லைகளில் உள்ள நமது எதிரிகளை நமக்கு எதிரான போருக்குத் தயாராக ஊக்குவிக்கும்" என்று பிரிக் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலின் மூலோபாயத் தேர்வுகள், குறிப்பாக வான் சக்தியை அதீதமாக நம்பியிருப்பதும், தரைப்படை மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் புறக்கணிப்பதும், நவீன போருக்குப் படையைத் தயார்படுத்துவதைத் தடுக்கிறது என்றும் பிரிக் வாதிடுகிறார்.
காஸா முனையில் இஸ்ரேலின் இராணுவ உத்தி பெருமளவில் தோல்வியடைந்தது என்று பிரிக் கூறினார். "ஹமாஸை IDF-ஆல் தோற்கடிக்க முடியவில்லை. விமானப்படை குண்டுவீச்சால் முக்கியமாக காஸாவில் வசிப்பவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஹமாஸ் போராளிகள் சுரங்கப்பாதைகளில் சுதந்திரமாகச் செயல்படும்போது, இஸ்ரேலியப் படைகள் பெரும் இழப்புகளைச் சந்திக்கும்" என்று பிரிக் மேலும் கூறினார்.
உடனடிப் பொருளாதார வீழ்ச்சி குறித்தும் பிரிக் எச்சரித்துள்ளார்,
"இந்த நிலை தொடர்ந்தால், சில வாரங்களுக்குள், நிதி பட்ஜெட் சீர்குலையும் என்று நிதி அமைச்சகம் தெரிவிக்கிறது. நாம் இன்னும் ஆண்டின் நடுப்பகுதியை கூட எட்டவில்லை" என்று பிரிக் தெளிவுபடுத்தினார்.
இராணுவம் இஸ்ரேலிய மக்களை கூட்டுத் தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது என்ற முன்னறிவிப்புடன் பிரிக் தனது கட்டுரையை நிறைவு செய்துள்ளார்.
Thejas News
Post a Comment