பணயக்கைதியாக ரணில்
(எம்.ஆர்.எம்.வசிம்)
ஐக்கிய தேசிய கட்சியை ஒற்றுமைப்படுத்தி அனைவரையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையை ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ள வேண்டும். என்றாலும் கட்சியில் இருக்கும் ஓரிரு நபர்களால் ரணில் விக்ரமசிங்க கட்சிக்குள் பணயக்கைதியாகி இருக்கிறார். ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை தனியாக அமைத்திருக்கலாம் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மொத்தமாக 119 உறுப்பினர்கள் தெரிவாகி இருக்கின்றனர். அவர்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 13 உறுப்பினர்களே தெரிவாகி இருக்கின்றனர். 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 55 உறுப்பினர்களை வெற்றிகொண்டது. அந்த 55 தற்போது இடம்பெற்ற தேர்தலில் 13 உறுப்பினர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
வெளியில் இருப்பவர்களை கொழும்புக்கு கொண்டுவந்து, கொழும்பை ஆக்கிரமிக்க முற்பட்டதால், மாநகர சபையின் ஒரு தொகுதியையாவது வெற்றிகொள்ள முடியாமல் போயிருக்கிறது. வடகொழும்பில் 17 வட்டாரங்கள் இருக்கின்றன. அந்த 17 வட்டாரங்களையும் அன்று நாங்கள் வெற்றி பெற்றோம். ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை காரணமாக எமது கட்சியை சேர்ந்த பலர் வேறு கட்சிகளிலும் சுயாதீன குழுக்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். இதுகுறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக குறிப்பாக வடகொழும்பை வெற்றிகொள்வதற்காக அன்று முன்னின்று செயற்பட்ட எனக்கு கட்சிக்குள் வரமுடியாதவாறு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். ஏனெனில் கட்சியில் நாங்கள் சிரேஷ்ட உறுப்பினர்கள். நாங்கள் கட்சிக்குள் சென்றால், அங்குள்ள சிலரின் வாய் அடைக்கப்படும். கட்சி ஒற்றுமைப்படும் கட்சிக்குள் எங்களுக்கு உரிய இடம் கிடைக்கும். இதனை விரும்பாத ஓரிரு நபர்களே எமக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். அதனால் டி.எஸ். சேனாநாயக்க உருவாக்கிய இந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதாக இருந்தால் அனைவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு என பெயர்ப் பட்டியல் ஒன்றை நாங்கள் அன்று தயாரித்தபோது, அதனை வெளியில் இருந்து வந்த இரண்டு பேர் மாற்றி அமைத்தார்கள். அதன் பெறுபேற்றை அன்று நாங்கள் கண்டோம். இந்த தேர்தலிலும் குறித்த இரண்டு பேரின் தீர்மானத்துக்கு அமைய செயற்பட்டதால் கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. அந்த 13 மன்றங்களின் பெறுபேற்றை கண்டுகொள்ள முடியுமாகி இருக்கிறது. அதனால் கட்சியை ஒற்றுமைப்படுத்தி நாங்கள் முன்னுக்கு செல்ல வேண்டும். என்றாலும் கட்சிக்குள் இருக்கும் இரண்டு பூதங்கள் இதனை செய்ய விடுவதில்லை.
ரணில் வி்க்ரமசிங்க ஜனாதிபதி பதவியை வகித்த பின்னர், அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் கட்சியை ஒற்றுமைப்படுத்தி, கட்சியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல அவர் முன்வந்து செயற்பட வேண்டும். ஆனால் குறித்த இரண்டு நபர்களால், அவருக்கு அதனை செய்ய முடியாமல், இன்று அவர் கட்சிக்குள் பணயக்கைதியாக இருக்கிறார் என்றார்.
Post a Comment