ஓடிக்கொண்டிருந்த (ஆட்டோவில்) இருந்து சிறுவனை தள்ளி விட்டவருக்கு மரண தண்டனை
ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் (ஆட்டோவில்) இருந்து 16 வயது சிறுவனை தள்ளிக் கொன்றார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நபரை, குற்றவாளியாக இனங்கண்ட ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து, வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தது.
ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்வீஸ், இந்த தீர்ப்பளித்தார்.
பதுளை-பசறை வீதியில் 6ஆம் மைல்கல் பிரதேசத்தில் பசறை எல்டொப் தோட்டத்தில் வசித்த பிரான்சிஸ் சுதர்சன் என்ற 16 வயது சிறுவனை 2014 ஏப்ரல் 9 ஆம் திகதியன்று ஆட்டோவில் இருந்து வெளியில் தள்ளியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் என்பது சாட்சியங்களின் ஊடாக நிரூபணமாகியது.
மரணமடைந்த சிறுவன், மரண தண்டனை வழங்கப்பட்ட நபர், மேலும் மூன்று சிறுவர்கள், மரண வீடொன்றுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மது போதையில் இருந்த 16 வயது சிறுவனுக்கும் பிரதிவாதியான (மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது என்பது வழக்கு விசாரணையில் இருந்து கண்டறியப்பட்டது.
இதன்போதே, ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து அந்த சிறுவனை, சந்தேகநபர் கீழே தள்ளி இருப்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
Post a Comment