உருகவைத்த குத்பா பிரசங்கம்
நேற்று (18) இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி மஸ்ஜிதில் இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கம் தாய் தந்தையர் உறவு பற்றியதாக இருந்தது, வழமை போன்று சில குர்ஆன் ஹதீஸ் வசனங்களுக்கான விளக்கங்கங்களை சொன்ன கதீப் அண்மையில் இடம்பெற்ற ஓரிரு சம்பவங்களை எடுத்துக் கூறினார்.
அவரிடம் ஒரு பெரியவர் வந்து ஹஸரத் எனக்கும் எனது குடும்பத்திற்கும் துஆ செய்யுங்கள், நான் இப்போது வீட்டை விட்டு வெளியேறி தனி அறையொன்றில் வாடகைக்கு இருக்கிறேன் என்று கூறினாராம்.
ஏன் என்று கேட்ட போது, வீட்டுக்கு செல்ல அச்சமாக இருக்கிறது, எனது மகன் எனக்கு அடிப்பதற்கு துணிந்து விட்டார் என்று கூறியுள்ளார், (காரண காரியங்கள் எவ்வாறு இருப்பினும் மகன் தந்தைக்கு கையோங்கும் நிலை கவலைக்கிடமான பாரதூரமான விடயமாகும்)
சில உலமாக்கள் ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றார்களாம், அங்கு அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது பலரும் தமது கதைகளை மனம் திறந்து பேசியுள்ளார்கள், அதில் ஒருவர் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் இருந்தாராம், அவரை சற்று ஆறுதலடையச் செய்து அழுகைக்கான காரணத்தை கேட்ட போது..
எனக்கு ஐந்து பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள், அவர்களை மிகச் சிறப்பாக வளர்த்து ஆளாக்கி விட்டேன் எல்லோரும் நல்ல நிலையில் வசதியாக வாழ்கிறார்கள், ஆனால் ஒருவரும் என்னை பொறுப்பேற்க முன்வரவில்லை, இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
அவர்கள் மாதாமாதம் கட்ணங்களை முறையாக செலுத்தி விடுகின்றனர், குறைகள் வைப்பதில்லை, ஆனால் அவர்களையும் உறவுகளையும் விட்டு சுக துக்கங்கள் எதுவுமின்றி தனிமையில் வாடுவது வேதனையாக இருக்கிறது, ஒரு முறையேனும் அவர்கள் அனைவரையும் சந்தித்து மனம் விட்டு பேசி விட்டு அக்கணமே மரணித்து விட ஆசைப்படுகிறேன் என்றாராம்.
மற்றொரு சகோதரர் ஒருநாள் தன்னிடம் வந்து ஹஸரத் நான் அண்மையில் ஒரு தொடர்மாடி வீடு ஒன்றை வாங்கினேன், எனது தாயாருக்கு ஏறி இறங்க சிரமம் ஆகையால் சில நாட்களுக்கு தம்பி வீட்டில் இருக்குமாறு கூறினேன்.
நோன்புப் பெருநாள் தினமன்று தம்பி பஸாருக்கு சென்று திரும்பி வந்த போது (ஏதும் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் தனது கோபத்தை தாயார் மீது கொட்டி விட்டார்) உம்மா, இனிமேலும் உங்களை எனக்கு பார்த்துக் கொள்ள முடியாது என சப்தமிட்டிருக்கிறார்.
மனமுடைந்த தாய் பெருநாள் தினம் எதுவுமே உண்ணாத பருகாத நிலையில் தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு தனது ஒரே மகளின் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றாராம்.
விடயமறிந்த சகோதரி உடனே தனக்கு (கதையை கூறும் சகோதரருக்கு) அழைப்பை எடுத்து, நானா உம்மாவை என்னிடம் அனுப்பி விடாதீங்க என்னால் பார்த்துக் கொள்ள முடியாது என்று காரணங்களை கூறியிருக்கிறார், (பின்னர் தயாரை இவர் அழைத்து வந்திருக்க வேண்டும் அது பற்றி கூறப்பட்ட வில்லை)
மிகவும் உணர்வுப்பூர்வமாக சில சம்பவங்களை எடுத்துக் கூறி (மைக்கிற்கு முன் சப்தத்தை குறைத்திருக்கலாம்) தாய் தந்தைக்கு மாறுபாடு செய்வோர் விடயத்தில் தரப்பட்டுள்ள இம்மை மறுமை தண்டனைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
தனது தயாருடன் கடினமாக நடந்து கொண்ட அல்கமா எனும் நபித் தோழர் மரணத் தருவாயில் ஷஹாதத் மொழிய முடியாது திணறியபோது இறைதூதர் (ஸல்) அவர்கள் அவரது தயாரை அழைத்து வந்து மகன் இழைத்த மாறுபாடுகளுக்கு மன்னிப்பை வழங்குமாறு வற்புறுத்திய (ழயீஃப் ஆன அறிவிப்பு) சம்பவத்தையும் அச்சமூட்டி எச்சரிக்கும் நோக்கில் கதீப் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
மறுமையில் தரப்படும் தண்டனைகளுக்கு புறம்பாக உலக வாழ்விலும் தண்டனை பெறுவதற்கான பாவங்களில் தாய் தந்தையருக்கு மாறுபாடு செய்தல், அநீதி அக்கிரமம்புரிதல் என்பவற்றை விட மோசமான பாவங்கள் இருக்க முடியாது என இறைதூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
தாய் தந்தையர் உடன் பிறப்புக்களது உறவுகளை அறுத்துக் கொள்வோர் உறவை அல்லாஹ்வும் துண்டித்துக் கொள்கிறான், அவர்களது எந்த நல்லமல்களும் பிரார்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்றெல்லாம் இறைதூதர் (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.
அதிலும் வயது முதிர்ந்த பெற்றார்கள் குழந்தைகள் சிறுவர்கள் போல் ஆகி விடுவார்கள், அவர்களை எடுத்தெறிந்து பேசவோ, அவர்களைப் பார்த்து உஃப் (ச்சீ) என்று ஒற்றை வார்த்தையில் பேசிவிடவோ வேண்டாம் என்றும் அவர்களோடு மிகவும் கனிவாக பணிந்து நடந்து கொள்ளுமாறும் அல்குர்ஆனும் கட்டளை இடுவதனை நாம் அறிவோம்!
யா அல்லாஹ்,
எம்மோடு வாழும் எமது பெற்றோர்களுக்கு நல்லாரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், மன நிறைவையும் தருவாயாக, எம்மை விட்டு உன்னிடம் மீண்டு விட்டவர்களை உனது எல்லையில்லா காருண்யம் கொண்டு அரவணைத்து உயரிய சவனத்தின் சுகந்தங்களை நல்குவாயாக!
ரப்பே ரஹ்மானே, அவர்கள் விடயத்தில் நாம் இழைத்த குற்றம் குறைகளை மன்னித்து, அவற்றிற்கான தவ்பாவை, பிராயச்சித்தங்களை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை எமக்கு நீ தருவாயாக!
பச்சிளம் பாலகர்களாக பரிவோடும் பாசத்தோடும் எம்மைப் பராமரித்தது போன்று அவர்களையும் நீ அன்போடு அரவணைத்துக் கொள்வாயாக!
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
19.04.2025

Post a Comment