மித்தெனிய முக்கொலை - பிடிபட்ட துப்பாக்கிதாரி வழங்கியுள்ள வாக்குமூலம்
கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, தனக்கு அதிக கடன் இருந்ததால், பெகோ சமனிடம் இருந்து பெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதைச் செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி, மித்தெனிய பகுதியில் கஜ்ஜா என்ற நபர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார், மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவரது இரண்டு பிள்ளைகளும் பின்னர் உயிரிழந்தனர்.
அதன்படி, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு பெண் உட்பட மூன்று பேர் நேற்று (5) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், டுபாயில் உள்ள பெகோ சமன் என்ற நபரின் அறிவுறுத்தலின் பேரில் பெப்ரவரி 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கஜ்ஜாவைக் கொல்ல முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியடைந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர், டுபாயில் மறைந்திருக்கும் பெகோ சமனின் நெருங்கிய உதவியாளரான லஹிருவின் அறிவுறுத்தலின் பேரில், கஜ்ஜாவைக் கொல்ல பெப்ரவரி 18 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருடன் சென்றதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு லஹிரு என்ற நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாகவும், கஜ்ஜா வரும் வரை துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் அருகே காத்திருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், அந்த இடத்தை விட்டு வெளியேறும்போது, கஜ்ஜா தனது இரண்டு பிள்ளைகளுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றதை நேரில் பார்த்ததாகவும், மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்துச் சென்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளையும் பார்த்த பிறகு சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியவில்லை என்றும், ஆனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் வற்புறுத்தலின் பேரில் தான் அவ்வாறு செய்ததாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் இருந்துக் கொண்டே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், தொழிலில் வெல்டராக உள்ளார், குற்றவாளிகள் பயன்படுத்தும் துப்பாக்கிகளில் குறைபாடுகள் ஏற்பட்டபோது அவற்றையும் சரிசெய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இந்நிலையில் குறித்த நபர் பாதாள உலகக் குழுவில் மறைந்திருந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் துப்பாக்கிதாரியாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட கஜ்ஜா, பொலிஸ் அதிகாரி போல் நடித்து, பெகோ சமனுக்குச் சொந்தமான கஞ்சா பொதியைத் திருடிய பிறகே இவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பதை பொலிஸார் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், கஜ்ஜா சூதாட்ட மையங்களை நடத்துபவர் எனவும், திடீரென பொலிஸார் போல ஆள்மாறாட்டம் செய்து அங்குள்ள பணத்தை கொள்ளையிட்டுச் செல்வது போன்ற முறைப்பாடுகளும் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைக்குப் பிறகு பொலிஸார் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, கொள்ளைச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட பல செய்தி அனுப்பும் சாதனங்களையும் கண்டுபிடித்தனர்.
இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கூட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட T-56 துப்பாக்கியையும் இதுவரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில், இன்று (6) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(அததெரண)
Post a Comment