ரணிலை வைத்து, மெஹ்தி ஹஸன் செய்துவிட்டாரா...?
சுதந்திரத்திற்குப் பின்னரான, மிகவும் ஆளுமையுள்ள சிங்களத் தலைவர் ரணில்!
சந்தேகமா? ரணிலின் இந்த இடத்தில் மகிந்தவையோ இன்னொரு தலைவரையோ உட்கார வைத்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கிறீர்கள்?
Mehdi Hasan உடனான அல்ஜெஸீரா நேர்காணல் கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்கள் நீடித்த - மிகவும் intense ஆன, நேரமெடுத்து யோசித்து பதில் சொல்ல முடியாத வகையிலான, உடனடி நேரடிப் பதில்களை கேட்டு நின்ற நேர்காணல்.
அதுமட்டுமல்லாது, ரணிலின் ஐம்பத்தி ஐந்து வருடகால அரசியல் வாழ்க்கையில் சந்தித்த மிக நெருக்கடியான நேர்காணலும் இதுவாகத்தான் இருக்கமுடியும்.
அல்ஜெஸீரா என்கிற சர்வதேச புகழ்வாய்ந்த ஊடகத்தின் முன் நின்று- மெஹ்தி ஹஸன் என்கின்ற புகழ்பெற்ற ஊடகவியலாளரினை முகம்கொடுத்து,
கொடுக்கப்படும் ஒவ்வொரு பதில்களும் இலங்கையையும்- இலங்கை சிங்கள பவுத்த அரசுகளையும், கடந்தகால- இக்கால அரசுகளை சங்கடத்துக்குள் - பிரச்சனைக்குள் தள்ளக்கூடும் என்று தெரிந்துகொண்டு,
தொடுக்கப்பட்ட ஒவ்வொரு உக்கிரமான கேள்விகளுக்கும் நேரடிப் பதில்களைக் கொடுக்காமல், எதனையும் ஒப்புக்கொள்ளாமல்,எந்தப் பொறியிலும் தானும் தன் அரசும் தன் நாடும் விழுந்துவிழாமல், மிகக் கச்சிதமாக தன்னை ஒரு பொய்யராக - நேர்மையற்றவனாக - மக்கள் விரோதியாக காட்டி, மொத்தப் பழியையும் தன் மேல் போட்டுவிட்டு, பேரினவாத கடந்த - நிகழ்கால அரசுகளையும், தன் அரசியல் தோழர்களையும், நாட்டையும் திறமையாக காப்பாற்றியிருக்கிறார் பிறவி அரசியல் ராஜதந்திரி ரணில் விக்கிரமசிங்க!
கவனமாகப் பாருங்கள்- இதுவரை அரசியல் வெளியில் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மைகளை மட்டுமே இந்த நேர்காணலில் ரணில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்ளவே இல்லை! அதற்கான accountability யை தொடக்கூட இல்லை. I am clean என்பதை தொடர்ந்தும் மெய்ண்டெய்ன் செய்துகொண்டேயிருந்தார்!
அதுமட்டுமல்லாது இலங்கை அரசின் அத்தனை குற்றங்களையும் முடிந்தளவு சாக்குப்போக்குச் சொல்லி மடைமாற்றியவண்ணமிருந்தார்.
மெஹ்தி ஹஸன் அழைத்து வந்திருந்த அவர் சார்பு பார்வையாளர்களின் இகழ்ச்சிச் சிரிப்புகளையும் தலைக்குள் ஏற்றாமல், நிலை தவறாது ஐம்பது நிமிடங்களை நெருப்பாற்றில் கடந்து முடித்திருப்பது, சிங்களவர்களுக்கு இதுவரைகாலும் கிடைத்த ஒப்பற்ற அரசியல் ராஜதந்திரி ரணில் என்கின்ற ஆளுமையின் திறமையே!
சர்வதேச மட்டத்தில் பதில் சொல்ல முடியாவிட்டாலும் கூட, தன்னை அடைமானம் வைத்து நாட்டை காப்பாற்றியிருக்கிறார் - இது பெரும்பான்மைக்கு கிடைத்த ஒப்பற்ற வரமில்லையா?
ஹஸன் அழைத்துவந்த மூன்று பேச்சாளர்களில் ப்ரான்ஸிஸ் ஹரிஸன் மட்டும் காத்திரமாக பேசியிருந்தார். மதுராவும் டேவிட்டும் நேர்காணலின் கனத்தை உணர முடியாமல் பேசினார்கள்.
ரணிலை வைத்து செய்துவிட்டார் ஹஸன் என்று பலரும் ரணிலின் மேலான கோபத்தை / கடுப்பை கொண்டாடுகிறார்கள் - அது சிற்றின்பமே!
ரணில் மீண்டுமொருமுறை நம் அனைவரையும் தன் ராஜதந்திரத்தால் (வெல்லமுடியாமல் நீங்கள் சொல்லும் நரித்தனத்தால்) தோற்கடித்திருக்கிறார் என்பதுதான் கசப்பான உண்மை!

Post a Comment