Header Ads



இலங்கையிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் குறித்து "SLOGAN" வெளியிட்ட அறிக்கை


சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் காணப்படும் ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை குறித்து பின்வரும் அறிக்கையை SLOGAN வெளியிட விரும்புகிறது.


ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்பட்டால், சர்வதேச சட்டத்தின்படி இலங்கை இனப்படுகொலைக்கு உடந்தையாகும்


தற்காலிக குடியுரிமையேனும் வேறொரு நாடு வழங்கும் வரை ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்படமாட்டார்கள் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்தியை SLOGAN வரவேற்கின்றது.


அதே நேரத்தில் சர்வதேச அகதிகள் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு உள்ள கடப்பாடுகளையும் அதிலும் முக்கியமாக International Court of Justice (ICJ) ரோஹிங்கியா இனப்படுகொலை சம்பந்தமாக விடுத்துள்ள கட்டளையின் அடிப்படையில் அகதிகளை எவ்வகையிலும் சர்வதேச சட்டத்தின் கீழ் மியான்மாருக்கு நாடு கடத்த முடியாது எனும் வெளிப்படையான உண்மையையும் அவ்வாறு நாடு கடத்தினால் இனப்படுகொலையில் பங்கெடுத்த குற்றத்திற்கு இலங்கை ஆளாகும் எனும் மிக முக்கியமான யதார்த்தத்தையும் SLOGAN இவ்வறிக்கை மூலம் உரத்துக்கூற முயல்கின்றது.


ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ICJ இன் அதிகார வரம்புக்கு உட்பட்ட நாடாக இலங்கை உள்ளதுடன் சர்வதேச சட்டப்படி ICJ இன் சட்டவாணைகளை அமுல்படுத்த வேண்டிய கடப்பாட்டிற்கும் உட்பட்டுள்ளது என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதன் அடிப்படையில் இவ்விவகாரத்தில் இலங்கைக்குள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டக்கடப்பாடுகளை பின்வருமாறு தொகுத்து வழங்குகிறோம்


1.ரோஹிங்கியா அகதிகளின் பின்னணி:


• ரோஹிங்கியாக்கள் பிரதானமாக மியான்மரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் சிறுபான்மையினர், உலகில் மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இவர்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள், தீவிர வன்முறை மற்றும் இடம்பெயர்வு உள்ளிட்ட கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள்.

• இனப்படுகொலைக்குள்ளாகும் இந்த ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷ், இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு உயிர் தப்பி, தஞ்சம் கோரிச்செல்கின்றனர். மிகவும் அரிதாகவே இலங்கைக்கும் (இரு தடவைகள் மட்டும்) வந்துள்ளனர்.


2. சர்வதேச சட்டம் மற்றும் கடமைகள்:

இலங்கை ICJ இன் அதிகாரவரம்பிற்கு உட்பட்டது மட்டுமல்லாது அகதிகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான பல சர்வதேச உடன்படிக்கைகளில் ஒரு பங்குதாரராக உள்ளது. இருப்பினும் அது 1951 அகதிகள் உடன்படிக்கை அல்லது அதன் 1967 நெறிமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்த போதிலும், சர்வதேச பாரம்பரிய சட்டங்கள் மற்றும் பிற ஒப்பந்தங்கள் இலங்கை மீது கடமைகளை விதிக்கின்றன:

2020 ஜனவரி 23 ஆம் திகதிய ICJ இன் கட்டளை

2020 ஜனவரி 23 ஆம் திகதிய கட்டளை மூலம், International Court of Justice பின்வரும் தற்காலிக உத்தரவை வழங்கியது:

"(1) மியான்மர் ஒன்றிய குடியரசு, இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டிப்பது தொடர்பான சட்டவாக்கத்தின் கீழ் உள்ள அதன் கடமைகளின்படி, அதன் நிலப்பரப்பில் உள்ள ரோஹிங்கியா மக்கள் குழுவின் உறுப்பினர்கள் மீதான, இந்த சட்டவாக்கத்தின் பிரிவு II இன் வரைவிலக்கணத்துக்குள் வரும் அனைத்து பாதக செயல்களையும் தடுக்க அதன் அதிகாரத்திற்குள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், குறிப்பாக:

(அ) ரோஹிங்கியா மக்கள் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது

(ஆ) ரோஹிங்கியா மக்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் அல்லது உளத் தீங்குகளை விளைவித்தல்.

(இ) ரோஹிங்கியா மக்கள் மீது, அம்மக்கள் குழுமத்தை முற்றிலுமாக அல்லது பகுதியாகவோ அழித்து ஒழிக்கும் நோக்கத்தோடு சேதமுறுத்தும் வாழ்க்கை நிலவரங்களை உண்டாக்குதல்

(ஈ) ரோஹிங்கியா மக்கள் குழுவின் புதிய பிறப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

(2) மியான்மர் ஒன்றிய குடியரசு, அதன் நிலப்பரப்பில் உள்ள ரோஹிங்கியா மக்கள் குழுவின் உறுப்பினர்கள் தொடர்பாக, அதன் இராணுவம் மற்றும் அது வழிநடத்தும் அல்லது ஆதரிக்கும் ஏதும் ஒழுங்கற்ற ஆயுதப் பிரிவுகளும் மற்றும் ஏதேனும் அமைப்புகள் மற்றும் நபர்களும் மேலே (1) விவரிக்கப்பட்டுள்ள எந்த பாதகச் செயல்களையும் அல்லது இனப்படுகொலைக்கான சதியையும், நேரடியாகவும் பகிரங்கமாகவும் இனப்படுகொலைக்கான தூண்டுதலையும், இனப்படுகொலையை செய்வதற்கு முயற்சிப்பதையும் அல்லது இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.


(3) மியான்மர் ஒன்றிய குடியரசு இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டிப்பது தொடர்பான சட்டவாக்கத்தின் பிரிவு II இன் வரைவிலக்கணத்துக்குள் வரும் பாதகச்செயல்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் அத்துடன் அவை அழிக்கப்படுவதைத்தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்


(4) மியான்மர் ஒன்றிய குடியரசு, இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பற்றிய அறிக்கையை, இந்த கட்டளை திகதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு அறிக்கையை நீதிமன்றத்தால் இறுதி முடிவு வழங்கப்படும் வரை சமர்ப்பிக்க வேண்டும்.


Non-Refoulement Principle ( பலவந்தமாக நாடுகடத்தாமைக்கோட்பாடு):

• சர்வதேச அகதிகள் சட்டத்தின் அடிமூலமான “பலவந்தமாக நாடுகடத்தாமைக்கோட்பாடு” துன்புறுத்தல், சித்திரவதை அல்லது பிற மனிதாபிமானமற்ற நடத்தைகளை எதிர்கொள்ளும் நாட்டிற்கு தனிநபர்களை நாடு கடத்துவதைத்தடைசெய்கிறது.

• Refugee Convention இலங்கை ஒரு தரப்பாக இல்லாவிட்டாலும், இக்கொள்கையானது வழக்கமான சர்வதேச சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு அனைத்து நாடுகளையும் பிணைக்கிறது.

மனித உரிமைகள் கடமைகள்:

• சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) மற்றும் சித்திரவதைக்கு எதிரான சட்டவாக்கம் (CAT) ஆகியவற்றில் இலங்கை ஒரு தரப்பாக உள்ளது, இவை இரண்டும் தனிநபர்கள் உயிருக்கு அல்லது சித்திரவதைக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடை செய்கின்றன.

• சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா உடன்படிக்கையின் கீழ் (CRC), குழந்தைகள் பாதுகாக்கப்படுவதையும், தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதையும் இலங்கை உறுதி செய்ய வேண்டும்.

3. ரோஹிங்கியா நாடு கடத்தலில் உள்ள சிக்கல்கள்

2020 ஜனவரி 23 ஆம் திகதிய ICJ இன் கட்டளை

இந்த தற்காலிக கட்டளை ரோஹிங்கியா மக்கள் மியான்மாரில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை சர்வதேச சட்டப்படி உறுதிப்படுத்தியது. எனவே ரோஹிங்கியா அகதிகளை மியான்மாருக்கு நாடு கடத்துவது அவர்களை இனப்படுகொலைக்குள் தள்ளுவதாகும் என்பதால் அக்குற்றத்திற்கு இலங்கை அரசு சர்வதேச சட்டத்தின் கீழ் ஆளாகும் என்பதை மிகவும் வலியுறுத்திக்கூற விரும்புகிறோம். அத்துடன் உலகின் எந்த ஒரு நாடும் ரோஹிங்கியா அகதிகளை மியான்மாருக்கு நாடு கடத்தியது இல்லை என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.


தன்னிச்சையான தடுப்புக்காவல்

இலங்கைக்கு வரும் ரோஹிங்கியா அகதிகள் குடிவரவு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தன்னிச்சையான தடுப்புக்காவல் ICCPR இன் கீழ் சர்வதேச தரத்திற்கு முரணானது.

நாடு கடத்தப்படுவதின் ஆபத்து

ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் அல்லது மற்றுமொரு பாதுகாப்பற்ற நாட்டிற்கு நாடு கடத்துவது, தனிநபர்கள் துன்புறுத்தல் அல்லது தீங்கு விளைவிக்கும் அபாயத்தில் இருந்தால் அது பலவந்தமாக நாடுகடத்தாமைக்கோட்பாடு கொள்கையை மீறுவதாகும்.

உள்நாட்டு சட்ட கட்டமைப்பின் குறைபாடு


அகதிகள் விவகாரங்களைக் கையாள இலங்கைக்கு குறிப்பிடப்பட்ட தேசிய சட்டம் இல்லை. இது பாதுகாப்பு தொடர்பான இடைவெளிகளை உருவாக்குகிறது மற்றும் அகதிகளை நாடு கடத்தும் அபாயங்களுக்கு உள்ளாக்குகிறது.

4. பரிந்துரைகள் மற்றும் தீர்வுகள்


2020 ஜனவரி 23 ஆம் திகதிய ICJ இன் கட்டளைக்கு கட்டுப்படல்

• இதன் அடிப்படையில் மியான்மாருக்கு நாடு கடத்தல் எந்தக் கட்டத்திலும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதை உறுதிப்பட தெரிவித்தல்

சர்வதேச தரங்களுக்கு இணங்குதல்.

• அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் உடன்படிக்கைகளின் கீழ் அதன் கடமைகளுக்கு ஏற்றவாறு இணங்குவதை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்.

• குறிப்பாக உள்நாட்டு அகதிகள் சட்டம் இல்லாவிட்டாலும் திரும்பப் பெறாத தத்துவங்களை மதித்தல் வேண்டும்.

சட்டமன்ற சீர்திருத்தங்கள்

சர்வதேச தரத்திற்கு ஏற்ப அகதிகள் மற்றும் புகலிடக் கொள்கையை அறிமுகப்படுத்துவது, அத்தகைய வழக்குகளைக் கையாள்வதில் சட்டப் பாதுகாப்பையும் வெளிப்படைத்தன்மையையும் ஏற்படுத்தும்.

சர்வதேச அமைப்புகளுடனான ஒத்துழைப்பு

• UNHCR மற்றும் பிற மனிதாபிமான முகவர் அமைப்புகளுடன் ஒத்துழைப்பது, சர்வதேச நியமங்களுக்கு இணங்குவதுடன் அகதிகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு உதவ முடியும்.


பிராந்திய ஒத்துழைப்பு

• பரந்த ரோஹிங்கியா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அகதிகள் பாதுகாப்பிற்கான பிராந்திய கட்டமைப்பை நிறுவுவதற்கு இலங்கை தென்னாசிய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற முடியும்.

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது என்பது மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் உள்ள சர்வதேசக் கடமைகளுடன் இலங்கை தனது உள்நாட்டுக் கொள்கைகளை சமநிலைப்படுத்த வேண்டிய ஒரு நுட்பமான பிரச்சினையாகும் என்பதை நாங்கள் உணருகிறோம். ஆனாலும் உள்நாட்டு அழுத்தங்களுக்கும் மேலாக இன உறவுகளில் குற்றச்சாட்டுகளை முகம்கொள்ளும் நாடு என்ற வகையில் மேலும் சிக்கல்களில் இலங்கை மாட்டிக் கொள்ளக் கூடாது என மிகுந்த கவலையுடனும் அக்கறையுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்


SLOGAN “தேசத்திற்கான நடவடிக்கை: வெளிநாட்டு இலங்கையர் குழுமம்” சார்பாக சட்டத்தரணி முகம்மது சமீம் அபூசாலிஹ்

சட்ட மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கான உப குழுவின் தவிசாளர்



No comments

Powered by Blogger.