Header Ads



இஸ்லாத்தினை அவமதித்த வழக்கு தொடருகிறது - ரிஸ்வி முப்தி, அஸாத் சாலி ஷிராஸ் நூர்தீன் ஆஜர்


இஸ்லாத்தினை அவமதித்த குற்றத்தின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்திக தொடவத்த என்ற நபர் மீதான ஒத்திவைப்பு வழக்கு கொழும்பு, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.


கடந்த வழக்கு விசாரணையின் போது பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.


குறித்த வழக்கில், மனுதாரர்களான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் பிரசன்னமாகியிருந்ததுடன் அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் ஆஜராகியிருந்தார்.


எனினும், பொது வழக்கறிஞரும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரும் சமுகமளிக்காததால், நீதிமன்றத்தினால் குறித்த அமர்வு 2025, ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இதன்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்களை மனுதாரர்களின் சாட்சியங்களோடு நிரூபிப்பதற்கு சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் மன்றில் விண்ணப்பம் ஒன்றினை விடுத்தார்.


மேலும், குற்றங்களை சாட்சியங்களின் ஆதாரங்களோடு நிரூபிப்பதற்கு முன் பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்பினால் நீதிமன்றம் மன்னிப்பு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


பல்லினங்கள் வாழும் இலங்கையில் இவ்வழக்கானது மிக கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்றாக திகழ்வதுடன் நீதி நிர்வாகத்தின் செயற்றிறன் மற்றும் நடைமுறை நியாயத்தை பரிசீலிப்பதாகவும் காணப்படுகிறது.


எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி இவ்வழக்கு மறு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.