"கிளீன் பொலிடீசியன்" ஆக இருந்திருந்தால் நஷ்டஈட்டை பெற்றிருக்க மாட்டார்கள்
கிளீன் ஸ்ரீலங்கா கம்பஹா மாவட்ட பிரதான நிகழ்வு நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் இன்று 09 ம் திகதி காலை ஆரம்பிக்கப்பட்டது.
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் இடம் பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே, மேலதிக செயலாளர் சுகத் கித்சிறி, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி, நீர்கொழும்பு மாநகர ஆணையாளர் நுவனி சுதசிங்க ஆகியோரின் பங்குபற்றலுடன் பிரதேச செயலகம், மாநகர சபை, பொலிஸ், விமானப்படை, நீர்கொழும்பு, தழுபொத்த சிறைச்சாலைகள், தேசிய நீர் வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம், றொட்டரி கழகம், செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுலா ஹோட்டல் சங்கம் பிரஜைகள் பொலிஸ் குழு, சிவில் அமைப்புகள் போன்றவற்றின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டு துப்பரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி கிளீன் ஸ்ரீலங்காவின் வேலைத்திட்டத்தின் கடலோரப் பிரதேசத்தை சுத்தம் செய்யும் பணி கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, வத்தளை பிரதேசங்களில் இன்று இடம்பெறுகின்றன.
நீர்கொழும்பில் நடைபெறும் பிரதான நிகழ்வில் நீர்கொழும்பு பிரதேச செயலத்திற்கு உட்பட்ட 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கலாக 20 கிலோமீட்டர் தூர கடலோரப் பிரதேசத்தைச் துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் நீர்கொழும்பின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இன்று ஆரம்பமாகும் இந்தப் பணி ஊடாக தொடர்ந்து கடலோரப் பிரதேசத்தை சுத்தமாக வைத்திருந்து உல்லாசப் பயணிகளை கவரும் விதத்தில் தொடர்ந்து பராமரிக்க பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
எமது நோக்கம் நாட்டை தூய்மைப்படுத்துவதாகும். சுற்றாடலை மாத்திரமன்றி ஒவ்வொரு அங்கத்தவர்களையும் ஒழுக்க விழுமியங்களையும் சுத்தப்படுத்த வேண்டும். எமது நாடு எந்தளவு மோசமான நிலைக்கு தல்லப்பட்டுள்ளது என்றால் கடந்த ஆட்சியில் தம்மிடம் இல்லாத வளங்களுக்கும் பொருட்களுக்கும் மதிப்பீடு செய்து இந்த நாட்டு அரசியல்வாதிகள் 42 பேர் மக்களின் வரிப்மணத்தில் 122 கோடி ரூபாவை நஷ்டஈடாக பெற்றுள்ளனர். இந்த நாட்டை தூய்மைப்படுத்தாத காரணத்தினாலையே இது இடம்பெற்றுள்ளது. அவர்கள் "கிளீன் பொலிடீசியன்கள்" ஆக இருந்திருந்தால் இந்த நிலமை ஏற்பட்டிருக்காது. எல்லா பக்கத்திலும் இந்த நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும்.
எமது மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இவ்வாறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அதிவேக வீதி நிர்மாணத்தின் போது வீடு, காணிபூமிகளை இழந்தவர்களுக்கு இவ்வாறு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சிறு தொகையை வழங்கப்பட்டன. கடந்த ஆட்சியாளர்கள் தமக்குத் தாமே தமது அகப்பையால் விரும்பிய தொகையை பகிர்ந்து கொண்டுள்ளனர். தூய்மையான அரசியல்வாதிகள் இருந்திருந்தால் இவை இடம்பெற்றிக்காது.
அரகலய என்ற போராட்டம் இந்த நாட்டின் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் சகல மக்களினதும் ஆதரவுடனான போராட்டமாக மாறியது.
அலரி மாலிகைக்கு கும்பல்களை வரவழைத்து உண்ண குடிக்கக் கொடுத்து கம்பு தடிகளை வழங்கி நிராயுதபானிகளான போராட்டக்காரர்களை தாக்க ஏவி விடப்பட்டனர். அன்று மே 9 காலையில் ஏற்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு அன்று மாலையே மக்கள் பதிலளித்தார்கள்.
காலி முகத்திடல் போராட்டத்திற்கு வரமுடியாவிட்டாலும் மக்களின் இதயநாடியில் இருந்தது ஒழுங்கான ஆட்சியை அமைப்பதாகும். அப்படி இல்லாமல் தேசிய மக்கள் சக்தியினதோ மக்கள் விடுதலை முன்னணியினோ வேலையல்ல.
மே 9 காலையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு உசிப்பேற்றாவிட்டால் மாலையில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது.
நாம் மேடைகளில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறோம். நீதியை நிலைநாட்ட தேவையான வசதிகளை செய்து கொடுப்பே அன்றி சட்டத்தை கையில் எடுக்கவில்லை என்றார்.

Post a Comment