Header Ads



மலசலகூடத்தில் குழந்தை பெற்று, ஜன்னலினால் வீசிய 18 வயது மாணவி


18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் சிசுவை பிரசவித்து யன்னல் வழியாக வீசிய நிலையில், அந்த சிசு, காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக  மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதுபற்றி தெரியவருவதாவது, மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்று வரும் 18 வயதுடைய மாணவி ஒருவர், கர்ப்பிணியான விடயத்தை மறைத்து வயிற்று வலி என கூறி மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (23)  அதிகாலை 3.30 மணியளவில்   அனுமதிக்கப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் குறித்த மாணவி மலசல கூடத்திற்கு சென்ற நிலையில், சிசுவை பெற்று யன்னல் வழியாக வீசிய நிலையில் சிசு, யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதை அடுத்து தாதியர்கள் அங்கு சென்று சிசுவை மீட்டுள்ளனர்.


பின்னர் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததையடுத்து வீசிய சிசுவை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், தாய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை குறித்த தாயும் சேறும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்க தெரிவித்தார்.


ரீ.எல்.ஜவ்பர்கான்  

No comments

Powered by Blogger.