Header Ads



3 சிறுமிகளை பலியெடுத்த தெற்கு நெடுஞ்சாலை விபத்து - மேலதிக தகவல்கள்


தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது பெற்றோரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


படுகாயமடைந்த தாய் மற்றும் தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100 கிலோமீற்றர் தொலைவில், கொட்டாவையில் இருந்து பாலட்டுவ நோக்கி சென்ற காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக அதே திசையில் பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.


விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள்கள் இருவர் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மாத்தறை சுஜாதா மகளிர் பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் உபேசிங்க ஆராச்சிகே சதீஷா என்ற 12 வயது சிறுமி மற்றும் அதே பாடசாலையில் 05ஆம் தரத்தில் கல்வி கற்கும் உபேசிங்க ஆராச்சிகே செனுதி என்ற 10 வயது சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


மூத்த மகளுக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


உயிரிழந்த சிறுமிகளின் தந்தை வர்த்தகர் மற்றும் தாய் உதானி ராஜபக்ஷ மாத்தறை புனித தோமஸ் குமார வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியை ஆவார்.


சடலங்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.