Header Ads



சஜித் மீது நம்பிக்கை உருவாகி இருக்கிறது, ஆய்வுகளிலும் சஜித் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது


கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்காக உணர்ச்சியுடன் செயல்படுகின்ற தலைவரே நாட்டுக்கு அவசியம், அவ்வாறான தலைவரை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர்  மாக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புதன்கிழமை (04) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், 


"நாட்டைக் கட்டியெழுப்பதற்கு சரியான நோக்கு, வேலைத்திட்டம், குழு, என்பன அவசியமாகும். அந்த சரியான நோக்கு, வேலைத்திட்டம், சிறந்த குழு, என்பன ஐக்கிய மக்கள் கூட்டணியில் காணப்படுகின்றன.


அத்தோடு அரசாங்கத்தின் பிழையான தகவல்களைக் கண்டு ஏமாறாமல் கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றுபவர்களை ஆட்சியில் அமர்த்துகின்ற யுகத்தை உருவாக்குவதற்கு மக்கள் இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் செயற்பட வேண்டும். அனைவருக்கும் சஜித் பிரேமதாசவின் மீது நம்பிக்கை உருவாகி இருக்கிறது. அந்த நம்பிக்கை நாட்டின் ஜனாதிபதி மீது இல்லை.


தேர்தல் காலங்களில் ஊடகங்களுக்கு அதிகமான அழுத்தங்கள் ஏற்படுகின்றன. தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் துளிர்விடச் செய்யும் செயற்பாடுகள் அதிகமாக இந்த நாட்களில் இடம்பெறுகின்றன. இவற்றை மூடிவிட்டு உண்மையை விளங்கிக் கொள்வது மக்களின் கடமையாகும்.


இன்று ரணில் விக்கிரமசிங்கவின் குழுவும் சஜித் பிரேமதாசவின் குழுவும் ஒன்றாக இணைவதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வடிவமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்ப்பின் அடிப்படையிலே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மிகவும் கடினமான போராட்டங்களை பல வருடங்களாக முன்னெடுத்தோம். அந்தப் போராட்டத்தின் முடிவாகத்தான் ஐக்கிய மக்கள் சக்தி உருவெடுத்தது.


அனைத்து ஆய்வுகளின் அடிப்படையிலும் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலே இவ்வாறான தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றமை குறித்து மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.


எமக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. கொள்கை ரீதியான பிரச்சினையே காணப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை வேறு பாதையிலே கொண்டு செல்ல முயற்சித்தார். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமூக ஜனநாயக கொள்கையிலிருந்து வெளியேறி வலதுசாரிக் கொள்கையின் பக்கம் ஐக்கிய தேசியக் கட்சியை கொண்டு சென்றார். இந்த விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே நாம் கட்சிக்குள் கடினமான போராட்டங்களை முன்னெடுத்தோம்.


கடந்த காலங்களில் சமூக நீதியை நிலை நாட்டிய வரலாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்றது. சமூக ஜனநாயகம் குறித்த மரபு உரிமையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்தது. அரசியல் சுதந்திரம், இலவச கல்வி, இலவச சுகாதாரம், மக பொல, ஜனசவிய, கம் உதாவ, இலவச சீருடை வழங்கள், இலவச அச்சுப் புத்தகம் வழங்கள், காணிகளுக்கான உறுதி பத்திரம் வழங்கள், தொழிற்சாலைகளை உருவாக்குதல் என்பவற்றை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டது.


அந்த சமூக ஜனநாயக பாதையில் இருந்து விலகி, கட்சி உறுப்பினர்களின் அனுமதியின்றி ஐக்கிய தேசியக் கட்சியை வலதுசாரி அரசியல் முகாமுக்குள் ரணில் விக்ரமசிங்க தொடர்புபடுத்தினார். அவரின் அந்த செயற்பாடுகள் காரணமாக வலதுசாரி முகாம்களின் செயற்திட்டங்களுக்கு அமைய நாம் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் போராட்டங்களை முன்னெடுத்தோம். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் காணப்பட்ட ஜனநாயகத்தையும் அவர் இல்லாது செய்தார்.


ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றாக இணைந்து செயற்பட முடியாத பாராளுமன்ற உறுப்பினர்களான நந்தா மெத்தீவ், விஜயபால மென்டிஸ், தயாரத்ன,  சரத் அமுனுகம, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, தர்மதாச பண்டா உள்ளிட்ட 60 பேர் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகிச் சென்றார்கள்.


ஐக்கிய தேசிய கட்சி,  ஐக்கிய தேசியக் கட்சியின் மரபுரிமைகளும் இன்று எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை மக்கள் நிரூபித்திருக்கின்றார்கள். கடந்த பொதுத் தேர்தலின் போது சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாம் புதிய அரசியல் சக்தி ஒன்றை ஆரம்பித்தோம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரணில் விக்ரமசிங்கவின் கையாட்கள் சிலர் யானை சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனாலும் மக்கள் அவர்களை பூஜ்ஜியம் வரை இறக்கி விட்டனர். சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான கொள்கையை இன்று ஐக்கிய மக்கள் சக்தி இடமே காணப்படுகிறது.


கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்காகவே ஒழிய தனி நபர்களின் ஒன்றிணைவுக்காக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் தயாராக இல்லை. ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து கொண்டவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை திட்டங்களுக்கு இணக்கம் தெரிவித்தே இணைந்து கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து கொண்ட கட்சிகள் அடிப்படை கொள்கையுடன் இணக்கமானவர்களாக இருக்கின்றார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.