Header Ads



ஜனாதிபதி ரணில் பணிப்புரையில், அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் - 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்


கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி  அறிவுறுத்தல்


இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய  தலைசிறந்த அரசியல்வாதியான  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக  "அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்" ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எம்.எச்.எம். அஷ்ரபின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க எம்.எச்.எம்.அஷ்ரபின் பிறந்த ஊரான கல்முனையில் இந்த நினைவு அருங்காட்சியகம்  நிர்மாணிக்கப்பட உள்ளது.


இத்திட்டத்திற்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


திறமையான சட்டத்தரணியும்  சிறந்த சட்டமியற்றுபவருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், புகழ்பெற்ற அரசியல்வாதி என்பதோடு அவர்  கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்காக பெரும் பணியாற்றியுள்ளார்.


முன்மாதிரியான மற்றும் மனிதாபிமானம் நிறைந்த  மக்கள் பிரதிநிதியான அவர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே  மிகவும் மதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

15-05-2024

No comments

Powered by Blogger.