Header Ads



கோட்டாபயவின் புத்தகத்திற்குள் எதுவும் இல்லை


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் தலைப்பில் சூழ்ச்சி என்று காட்டப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் புத்தகத்திற்குள் எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சதெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்றையதினம் -02- இடம்பெற்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்த தினத்தன்று நீங்கள் (சபாநாயகர்) சபைக்கு விசேட உரையாற்றினீர்கள். அரகலய வேளையில் அரசியலமைப்புக்கு முரணான வகையில் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்க தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும், அரசியல் தரப்பின் மட்டத்திலும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தீர்கள்.


'9 செகவுனு' என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தை நான் வெளியிட்டேன். அதில் தேசிய மற்றும் சர்வதேச தரப்பினர் உங்களுக்கு அழுத்தம் பிரயோகித்ததையும், கொழும்பில் உள்ள தூதரகங்கள் செயற்பட்ட விதத்தையும் பெயர் குறிப்பிட்டு வெளிப்படுத்தியுள்ளேன்.


அதேபோல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட புத்தகத்தின் முன் அட்டையில் 'சூழ்ச்சி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புத்தகத்துக்குள் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை.


நீங்கள்(சபாநாயகர்) பொய்யுரைக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அதேபோல் மனசாட்சிக்கு அமைய நானும் பொய்யுரைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியும் பொய்யுரைக்கவில்லை என்று நம்புகிறேன்.


பொருளாதார நெருக்கடியின் போது நாட்டின் இறையாண்மையை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்பட்ட தரப்பினர் தொடர்பில் நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாள் விவாதத்தை நடத்த வேண்டும்.


நாட்டின் இறையாண்மையை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்பட்ட தரப்பினர் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். கடந்த காலத்தை மறந்து விட்டு செயற்படலாம் என்று கருதுவது மக்களாணையை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.