Header Ads



மன்னித்த மைத்திரிபாலவும் - மன்னிப்பு கேட்டும், தண்டனை கொடுத்த நீதிமன்றமும்


கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இன்றையதினம் (28) தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யபட்டபெந்தி, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்தார்.


கடந்த 2016 மார்ச் 30ஆம் திகதி கூரகல விகாரை தொடர்பில், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வௌியிட்ட கருத்து, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, ஞானசார தேரருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என நிரூபணமானதைத் தொடர்ந்து குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


மன்னிப்புக் கோரிய ஞானசார தேரர்

இதேவேளை, 8 வருடங்களுக்கு முன்னர் தான் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து, மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் தான் மன்னிப்பு கோருவதாக ஞானசாரதேரர் அண்மையில் தெரிவித்திருந்தார். தனது நடவடிக்கைக்காக முஸ்லிம்களிடம் ஆழ்ந்த கவலை தெரிவிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.


ஏற்கனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தி காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2016 ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கின்போது எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்காக ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டார்.


இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டார் என்று அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.


இதுதொடர்பில் ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.


அது தொடர்பாக ஆராய்ந்த சட்ட மாஅதிபர், ஞானசார தேரருக்கு எதிரான 4 குற்றங்களின் கீழ் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.


குறித்த விடயம் தொடர்பில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான 4 குற்றங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளதாக அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அக்குற்றங்கள் தொடர்பில் அவர் குற்றவாளி எனவும் தீர்ப்பளித்துள்ளது.


குறித்த வழக்கு தொடர்பில், கடந்த 2018 ஜூன் 14 ஆம் திகதி, ஹோமாகம நீதவான் உதேஷ் ரணதுங்கவினால், ஞானசார தேரருக்கு ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


அத்தீர்ப்புக்கு எதிரதாக, ஞானசார தேரர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டுக்கு அமைய, அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


அதனைத் தொடர்ந்து 2018 ஓகஸ்ட் 08ஆம் திகதி அவருக்கு 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


அவர் தனக்கு விதிக்கப்பட்ட குறித்த தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தபோதும் அவை நிராகரிக்கப்பட்டன.


மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பு

இந்நிலையில் கடந்த 2019 மே 23ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து அவர் பொது மன்னிப்பின்கீழ் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.