Header Ads



தெருக்களில் பிச்சையெடுக்கும் 30.000 சிறுவர்கள் - ரிதிகம முகாம் நிரம்பி வழிகிறது


நாடளாவிய ரீதியில் முப்பதாயிரம் வரையிலான குழந்தைகள் பிச்சை எடுத்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் மற்றும் தரவுக் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார் .


நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார்.


“இது மிகவும் சிக்கலான சூழ்நிலை. இது எதிர்காலத்தைப் பாதிக்கும் பிரச்சினையும் கூட. இந்த குழந்தைகள் பற்றிய சரியான தரவு அமைப்பு அரசிடம் இல்லை. சரியான தரவு அமைப்பைத் தயாரிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இதில் கவனம் செலுத்தாவிட்டால், தெருவோர குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து, போதைப்பொருள் பாவனை, விற்பனை, திருட்டு, மோசடி, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்கள் அதிகரிக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பெற்றோர்கள் அல்லது தற்காலிக பாதுகாவலர்கள் இந்த இளம் குழந்தைகளை பிச்சை எடுப்பது மற்றும் பிற பணம் சம்பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 04-15 வயதுக்குட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் தனியாகவோ அல்லது நெரிசலான நகரங்கள், புனிதத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் பெரியவர்களுடன் பிச்சையெடுக்கும் பிச்சை எடுக்கிறார்கள். அவர்கள் பாடசாலை செல்வதில்லை, சில பெற்றோர்கள் இந்தக் குழந்தைகளை பல்வேறு கூலி வேலைகளுக்கும் தெருவோர வியாபாரங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் பொலிஸ் மா அதிபர்கருத்து தெரிவிக்கையில் ;


“இந்தக் குழந்தைகளில் சிலரை பொலிஸார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். ஆனால் இந்த சிறார்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவர்களை தங்க வைக்க சரியான பாதுகாப்பான இடம் இல்லை என்பது முக்கிய பிரச்சனை. பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சமூக சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான ரிதிகம முகாம் தற்போது நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் தெருவோர குழந்தைகளை நீதிமன்றத்திற்கு அனுப்பி சிறையில் அடைப்பது பலனளிக்காது. இந்த குழந்தைகள் நீண்ட கால மறுவாழ்வு செயல்முறைக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கான இடவசதியுடன் கூடிய இடம் இல்லை” என்றார்.

No comments

Powered by Blogger.