Header Ads



ரிஸான் ஸெய்ன் காலமானார், அவரது இறுதிப் பிறந்த நாளன்று அவர் எழுதிய ஒரு குறிப்பு

 

பதுளை மாவட்ட காதி நீதிமன்ற காழியாராகவும், சமூக ஆர்வலராகவும், எழுத்தாளராகவும் செயற்பட்டு வந்து ரிஸான் ஸெய்ன் காலமானார்.


அவர் கடந்த மே மாதம் அவரது பேஸ்புக்கில் அவர் எழுதிய ஒரு குறிப்பு, சமூக நலன்கருதி  இங்கு மீள் பதிவு செய்யப்படுகிறது.


இன்னொரு அகவையில் எனது காலடித் தடங்கள்.


வாழ்க்கை பயணம் ஓடிக் கொண்டே இருக்கிறது. எமக்கான நிறுத்தம் வரும்.  அதுவரை அதன் இயங்கியலாக நாமும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். உலகின் இயல்பும் அவ்வாறுதான். நகர்வதே அதன் அடிப்படை. அது காலத்துக்குள் சுழன்று கொண்டிருக்கிறது. மனித வாழ்வும் அப்படித்தான். வயது செல்வது என்பது மனிதன் அனுபவங்களால் பட்டைத் தீட்டப்படுகிறான் என்றே அர்த்தம். வெறுமனே காலம் செல்வதல்ல வாழ்க்கை. நதியாக ஊர்ந்து செல்லும் பயணம் மரணம் என்ற சமுத்திரத்தோடு கலக்கவே வேண்டும். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. இலக்கு நோக்கிய பயணமே வாழ்வாக அமைய வேண்டும் என்பதையே மரணம் கூட கற்றுத் தருகிறது. 


இறைவனின் பிரதிநிதியாக இருப்பவன் மனிதன்.  செய்யப்பட வேண்டிய குறிக்கப்பட்ட பொறுப்புகளும் பணிகளும் அவனுக்கு இருக்கின்றன. அவன் உயரிய நோக்கிலேயே படைக்கப்பட்டுள்ளான். அவை நிறைவேற்றப்பட வேண்டும். வாழ்வின் அகவைகள் கழியும் போது அந்த பணிகளும் பொறுப்புக்களும் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது ஞாபகத்துக்கு வர வேண்டும். கடந்து போன வாழ்வை மீள்வாசிப்பு செய்ய வேண்டும். அதுவும் சுயவிசாரணையின் ஒரு புள்ளியே. அந்த விசாரணை அவனை விழிப்படையச் செய்ய வேண்டும்.


பணிகள் தனிநபர் சீர்திருத்தமாகவும் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்ததாகவும் உள்ளன. அவன் பன்முகப்படுத்தப்பட்ட முகங்களுடைய பணிகளோடு பிறந்திருக்கிறான். எனவே, அவனது வாழ்வு சாதாரணமானதல்ல. வியாபித்து கிளை பரப்பும் தன்மை உடையது. வாழ்வை வெறுமனே வாழ்ந்துவிட்டு சுவர்க்கம் போக கனவு காண்பது பொருத்தமானதா..? என்று வினவ வேண்டும். சடவாத சிந்தனைக்குள் மட்டுமே மூழ்கிப்போய் வெற்றுக் கனவுகளால் பணிகள் முடிவடையுமா..? சிந்தித்துப் பார்க்க வேண்டும். 


எம்மை கடக்கும் ஒவ்வொரு நாளும் கழியும் ஒவ்வோர் அகவையும் சுயவிசாரணையின் நீதிமன்றங்களே. வாழ்வில் எமது பொறுப்புகளில் எவ்வளவு தவறுவிட்டுள்ளோம் அல்லது எந்தளவு குறைபாட்டுடன் செய்திருக்கிறோம் என்பதற்கான விசாரணைகள் மேசைக்கு வர வேண்டும். அந்த பணிகளை காத்திரமாக புதிய உற்சாகத்துடன் மீண்டும் செய்ய, வாழ்வில் நம்பிக்கையோடு புது தெம்பைப் பெற, ஓர் உத்வேகத்தைத் தரும் இயக்க உந்துதலை அடைய  ஒரு சந்தியாகவே கடக்கும் இந்த அகவையை ஞாபகப்படுத்திக் கொள்வதே பொருத்தமானது. அதன் மூலமே வாழ்வை மேலும் அர்த்தப்படுத்தலாம். இந்தப் அர்த்ப்படுத்தலே வாழ்விற்கு மெருகூட்டப்பட்ட ஓர் ஆன்மீக உள்ளீட்டை, பெறுமானத்தை வழங்க முடியும்.


இலக்கமாகக் கூடும் வயதை விட வாழ்வின் பயணமே முக்கியம். அதனால் இலக்கங்களை பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற மனோநிலை எனக்கு. இவ்வளவு காலம் வாழ்வதே அல்லாஹ்வின் பேரருளே. அவனுக்கே எல்லாப் புகழும். சாதனைகளுக்கு எல்லையில்லை. மனத் திருப்தியளிக்கவல்ல பல அடைவுகளை அடைந்திருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். எல்லாவற்றினதும் அறுவடைகளை காண முடியாது . விதைத்தவை கிளை பரப்பும் என்ற நம்பிக்கை உண்டு. இன்ஷாஅல்லாஹ்.


ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய மிகப் பெரிய கொடை இன்னொருவருடைய தூய்மையான பிரார்த்தனையும் மனம் நிறைந்த வாழ்த்துமே. அவனுக்கு அது ஓர் அருளாக முடியும். அந்த நோக்கில் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. சாதாரண குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப், முகநூல் மற்றும் உள்பெட்டி வாயிலாக கூறப்பட்ட வாழ்த்துக்கள் மற்றும் பிராரத்தனைகள் எனது தனிப்பட்ட, குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த பொறுப்புக்களை நல்லமுறையில் முன்னெடுக்க  ஒரு புதுத் தெம்பை வழங்கும். இன்ஷாஅல்லாஹ். 


உங்கள் அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் எனது ஆழமான நன்றிகள்! 


அன்புடன்


எம். ரிஸான் ஸெய்ன்.

No comments

Powered by Blogger.